பொங்கலுக்கு ‛கண்மாய் கட்லா’ கிடைக்காது: தேனி மாவட்ட மீன் வியாபாரிகள் கை விரிப்பு

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள கண்மாய்களில் நீர் இல்லாததால் கண்மாய் கட்லா மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

Update: 2023-12-12 02:38 GMT

கண்மாய் கட்லா

தேனி மாவட்டம் மட்டுமல்ல, தமிழகத்தில் தற்போதைய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக எந்த கண்மாய்களிலும் மீன் வளர்க்க தேவையான தண்ணீர் இல்லை. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தற்போது தான் கண்மாய்களுக்கு நீர் வரத்து உள்ளது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் விழாவிற்கு ‛கண்மாய் கட்லா’ கிடைக்காது என மீன்வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேனி மாவட்ட மீன்வியாபாரிகள் கூறுகையில், மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்தவுடன் ஐஸ் பாக்ஸில் வைத்து விடுவார்கள். பிடித்து நான்கு முதல் ஐந்து நாள் கழித்தே கரைக்கு வந்து சேரும். கரைக்கு வந்த பின்னர் பல கை மாறி வாடிக்கையாளர்கள் கைக்கு போய் சேர எப்படியும் பிடித்ததில் இருந்து ஒரு வாரம் ஆகி விடும்.

கடல் மீன்கள் ஐஸ் பாக்ஸில் மிகவும் பாதுகாப்பாக பல நாட்கள் இருப்பதால், அதன் சுவை சிலருக்கு பிடிக்காது. உண்மையில் கடல் மீன்கள் சாப்பிடுபவர்களே அதிகம் இருந்தாலும்,. தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், அரியலுார் போன்ற கடல் இல்லாத மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கண்மாய்களில் அதிகாலையில் பிடிக்கும் மீன்களை அடுத்த சில மணி நேரத்தில் விலைக்கு வாங்கி அறுத்து சாப்பிடுகின்றனர்.

இந்த மீன்கள் அறுக்கும் போதே, ரத்தம் வடியும். இதனை துண்டுகளாக அறுத்து எடுக்கும் போதே, அந்த துண்டுகளிலும் கூட ரத்தம் வடியும். இந்த மீன்களை சமைத்து சாப்பிடும் போதே சுவையாக இருக்கும். அதிலும் அணைக்கட்டுகளில் வளரும் மீன்களை விட, கண்மாய்களில் வளரும் கட்லா மீன்களின் சுவை அதிகம் என்பதால் இதற்கு ரசிகர் கூட்டமும் அதிகம்.

சில ஆண்டுகளாக மழை குறைவால் கண்மாய்கள் வறண்டு கிடந்தன. இதனால் அணைக்கட்டுகளில் தேங்கி நிற்கும் நீரில் வளர்ந்த கட்லா மீன்களை மட்டுமே சாப்பிடுகின்றனர். கண்மாய்் மீன்களை பிடித்து கரையிலேயே வைத்து உயிருடன் அறுத்து சுத்தம் செய்து கொடுக்கும் பழக்கம் தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ளது.

இந்த ஆண்டு கடந்த 20 நாட்களாக மழை பெய்தாலும் கடந்த ஐந்து நாட்களாக தான் கண்மாய்களுக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது. இனிமேல் தான் இதில் மீன்களை வளர்க்க வேண்டும். இந்த மீன்கள் வளர்ந்த பின்னர் பிடித்து அறுத்து சாப்பிட சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

எனவே தற்போது அணைக்கட்டுகளில் வளர்ந்த கட்லா மீன்கள் மட்டும் விற்பனைக்கு வருகின்றன. இதுவும் குறைந்த அளவே வருவதால் விலை கிலோவிற்கு 220 ரூபாயினை கடந்து விட்டது. கண்மாய் கட்லா இந்த ஆண்டு பொங்கல் விழாவிற்கு கிடைக்காது. இது கண்மாய் கட்லா மீன் பிரியர்களுக்கு கசப்பான செய்தி தான். இருப்பினும் கண்மாய் கட்லா சாப்பிட இவர்கள் சில மாதங்கள் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News