கம்பம் தி.மு.க. எம்.எல்.ஏ.வின் அன்பு காதலி: அவரே வெளியிட்ட ரகசியம்

கம்பம் தி.மு.க., எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் தனது அன்பு காதலி பற்றிய ரகசியங்களை பகிரங்கமாக வெளியிட்டு கலகலப்பூட்டினார்.

Update: 2022-01-04 03:47 GMT

சின்னமனுார் அருகே சின்னஓவுலாபுரம் கிராமத்தில் நடந்த சர்க்கரை நோய் கருத்தரங்கினை கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உடன் சின்னமனுார் ஒன்றிய தலைவர் நிவேதா அண்ணாத்துரை மற்றும் நலம் அகாடமி குழுவினர்.

எனது அன்புக்காதலி எனக்கு ஒழுக்க நெறிகள் மிகுந்த அறநெறி வாழ்வியலை கற்றுத்தந்து நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ உதவி வருகிறார் என கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் கலகலப்பூட்டும் வகையில் சுவாராஸ்யமாக பேசினார்.

சின்னமனுார் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், சின்ன ஓவுலாபுரம் கிராம ஊராட்சி நிர்வாகம், தேனி நலம் அகாடமி இணைந்து சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர். சின்னஓவுலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சின்னமனுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் அண்ணாத்துரை முன்னிலை வகித்தார். சின்னமனுார் ஊராட்சி ஒன்றிய தலைவர் நிவேதா அண்ணாத்துரை தொடங்கி வைத்தார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை சொத்துப்பாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ஜெயராமன், நலம் அகாடமி டாக்டர்கள் முகமதுபாஷித், சுபின், கமலேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் பேசியதாவது: நான் சேர்த்த வைத்த சொத்து, எனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், எனது சொந்தங்கள் என என்னிடம் இருக்கும் அனைத்தும் என்னை விட்டு பிரிந்து விடும். என் உடலில், ரத்தத்தில் கலந்து ஓடிக்கொண்டிருக்கும் சர்க்கரை நோய் மட்டும் நான் இயற்கையோடு கலக்கும் வரை என்னுடன் வாழும். எனக்குள் கலந்துள்ள சர்க்கரை நோய் தான் எனது அன்புக்காதலி. அந்த காதலி எனது வாழ்க்கையினை எந்த அளவு மாற்றியிருக்கிறார் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

சர்க்கரை நோய்  என்ற என் அன்பு காதலி என்னை தினமும் உடற்பயிற்சி செய்ய சொல்கிறார், எண்ணெய்யில் பொறித்த உணவுகளை சாப்பிட அனுமதிக்க மாட்டார். பீடி, சிகரெட், கஞ்சா புகைக்க அனுமதிக்க மாட்டார். நேரத்திற்கு மருந்து மாத்திரைகளை உட்கொள்ள அறிவுறுத்துவார். முறையான உணவு பழக்கம், உடற்பயிற்சி நிறைந்த ஒரு செறிவான வாழ்வியல் முறைக்கு என்னை கொண்டு சென்றுள்ளார். இந்த புவியில் உள்ள எந்த கெட்ட பழக்கங்களும் என்னை அணுக விடாமல் பார்த்துக் கொண்டார். அத்தனை நல்ல பழக்கங்களையும் கற்றுத்தந்துள்ளார். இதனால் என் உடம்பை பேணி பாதுகாக்கவும், என் உடம்பை நானே காதலிக்கவும் கற்றுத்தந்துள்ளார்.

இந்த நெறி மிகுந்த வாழ்வியல் முறையால் எனது உடல் நலமும், மன நலமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் என் ஆயுளும், ஆரோக்கியமும் அதிகரித்துள்ளது. நான் கடந்த 40 ஆண்டுகளாக சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகிறேன். உண்மையை சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த 40 ஆண்டு கால சர்க்கரை நோய் கலந்த வாழ்க்கையில், ஒரு நாள் கூட நான் மருந்து, மாத்திரைகளை சாப்பிடதில்லை. இன்சுலின் போட்டதில்லை.

உடற்பயிற்சி, பக்குவமான உணவு முறைகள், நெறியான ஒழுக்கம் நிறைந்த வாழ்வியல் முறை மூலம் நான் 40 ஆண்டுகளாக சர்க்கரை நோயினை மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்து மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறேன். இதன் மூலம் உணவும், உடலும் எப்படி பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு கெட்ட பழக்கத்திற்கும் அடிபணிந்து விடக்கூடாது. இவ்வாறு பேசினார்.

Tags:    

Similar News