தேனி மாவட்டத்தில் 1.05 லட்சம் ஏக்கரில் சாகுபடி: உரம் விநியோகத்தை கண்காணிக்க குழு
தேனி மாவட்டத்தில் அதிக மழை பொழிவால் விவசாய, தோட்டக்கலை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் அதிகளவு பரப்பில் சாகுபடி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக நெல் 25 ஆயிரத்து 597.5 ஏக்கர் பரப்பிலும், சிறு தானியங்கள் 36 ஆயிரத்து 442.5 ஏக்கர் பரப்பிலும், பயறு வகைகள் 23 ஆயிரத்து 312.5 ஏக்கர் பரப்பிலும், எண்ணெய்வித்துக்கள் 6 ஆயிரத்து 840 ஏக்கர் பரப்பிலும், பருத்தி 6 ஆயிரத்து 705 ஏக்கர் பரப்பிலும், கரும்பு 6 ஆயிரத்து 495 ஏக்கர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 392.5 ஏக்கரில் சாகுபடி நடக்கிறது.
இதில் தோட்டக்கலை பயிர்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. இந்த கணக்கு வேளாண்மைத்துறை பயிர்கள் ஆகும். தோட்டக்கலை பயிர்களையும் சேர்த்தால் மொத்த சாகுபடி பரப்பு இன்னும் இரண்டு மடங்கு அதிகரிக்கும்.
இதனால் உரங்களின் தேவை கிடுகிடு வென அதிகரித்துள்ளது. ஆனால் உரங்களுக்கு பற்றாக்குறை இல்லை என வேளாண்மைத்துறை அதிகரித்தாலும், கடும் விலை உயர்வு, தேவை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக உரங்கள் விற்பனையில் பெரும் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை முறைகேட்டில் ஈடுபட்ட 11 உரக்கடைகள் மூடப்பட்டுள்ளன. முறையான விவரங்கள் வெளியிடாத 21 கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரங்கள் சப்ளை, விற்பனையை கண்காணிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.