அரிசி கடத்தல் அச்சம்; ரேஷன் பொருட்கள் வாங்க குவியும் கூட்டம்

தேனி மாவட்டத்தில் ரேஷன் பணியாளர்கள் அரிசி கடத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் பொருட்களை வாங்க ரேஷன் கடைகளில் குவிகின்றனர்.

Update: 2021-07-18 09:15 GMT

பொருட்களை வாங்க ரேஷன் கடைகளில் குவியும் மக்கள்.

தேனி மாவட்ட ரேஷன் பணியாளர்கள் அரிசி கடத்தி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க அவசரப்பட்டு கூட்டம் கூடுகின்றனர். இதனால் கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரும் உத்தரவிட்டுள்ளார். இதனால் ரேஷனில் பெரும்பாலும்  தரமான பொருட்களே இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆனால், பல கடைகளில் ரேஷன் பணியாளர்கள் பொருட்களை மொத்த வியாபாரிகள் மூலம் கேரளாவிற்கு கடத்தி விடுகின்றனர். தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி கேரளாவில் ஒரு கிலோ முப்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ரேஷன் பணியாளர்களுக்கு ஒரு கிலோ ரேஷன் அரிசிக்கு பத்து ரூபாய் வரை வழங்குகின்றனர். இதனால் ரேஷன் பணியாளர்கள் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.

ரேஷன் அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் கேரளாவிற்கு கடத்தப்படுவதை கண்டித்து தேனி மாவட்டத்தில் பல இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அனைத்து கடைகளிலும் பொதுமக்களுக்கு நுாறு சதவீதம் அட்டைதாரர்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.இதனை கூட்டுறவு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதனால் கடைகளில் பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ரேஷன் பணியாளர்கள் மீது நம்பிக்கை இல்லாததால், உடனே அரிசி வாங்கி விட வேண்டும் என கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. ஒரு சில இடங்களில் போலீசாரை வரவழைத்து அரிசி விநியோகிக்கும் அளவு கூட்டம் கூடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News