கொரோனாவுக்குபின் அரசு பள்ளிக்கு மட்டுமல்ல அரசு மருத்துவமனைக்கும் மவுசு

கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார தாக்கத்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40% வரை அதிகரித்துள்ளதாக, மருத்துவர்கள் கூறினர்.

Update: 2021-09-29 13:15 GMT

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.

கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு காரணமாக,  அரசு பள்ளிகளில் மட்டும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவில்லை.; அரசு மருத்துவமனைகளும்,  அதிகப்படியான நோயாளிகளால் நிரம்பி வழிவதாக, மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, தேனி மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு வாட்டி எடுக்கும் நிலையில், ஏழை மக்களுக்கு மட்டுமல்ல, நடுத்தர மக்களின் பொருளாதார நிலையும் கீழே இறங்கி விட்டது. வழக்கமாக அரசு மருத்துவமனைகளுக்கு பெரும் ஏழை மக்கள் மட்டுமே வருவார்கள். நடுத்தர வர்க்கத்தில் மிகச்சிறிய அளவில் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு வருவார்கள். பெரும்பாலும் தமிழகத்தை பொறுத்தவரை,  நடுத்தர வர்க்கத்தினர் தங்களுக்கென குடும்ப டாக்டர்கள், குடும்ப மருத்துவமனைகள் வைத்துக்கொண்டு சிகிச்சை பெறுவார்கள்.

கொரோனாவிற்கு பிந்தைய பொருளாதார சூழல், நடுத்தர மக்களையும் அரசு மருத்துவமனையினை நோக்கி திருப்பி உள்ளது. ரத்த சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, சைனஸ், நரம்பியல் பிரச்னைகள், கண் பரிசோதனை, தலைவலி போன்ற பிரச்னைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் கூட,  தற்போது அரசு மருத்துவமனைகளுக்கு வந்து விட்டனர். இதனால் மாநிலம் முழுவதுமே,  சராசரியாக அரசு மருத்துவமனைகளில் வெளி மற்றும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அதேபோல் முன்பெல்லாம் தனியார் மருத்துவமனைகள் மருத்துவ முகாம் நடத்தும் போது கூட்டம் அதிகம் இருக்கும். தொடர்ச்சியாக சிகிச்சை பெறவும் தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்வார்கள். தற்போது தனியார் மருத்துவமனைகள் நடத்தும் மருத்துவமுகாம்கள் பெரும்பாலும் மந்தகதியில் உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News