தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சைபர் - ஆனாலும் கேரளாவால் ஆபத்து
கேரளாவில், கொரோனா பாதிப்பு குறையாததால் தேனி மாவட்டத்திற்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா பாதிப்பு தினமும் ஒருவர் அல்லது இருவருக்கு மட்டுமே கண்டறியப்பட்டு வருகிறது. இந்த 90 நாட்களில், 23 நாட்கள் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. மாவட்டத்தில், நேற்றும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. இது, காதாரத்துறை அதிகாரிகளுக்கு நிம்மதியை கொடுத்தாலும், கேரளாவால் மிரட்டல் தொடர்வதாக, அவர்கள் கூறுகின்றனர்.
தேனி மாவட்டமும், கேரளாவில் இடுக்கி மாவட்டமும் 75 கி.மீ., துாரம் எல்லைகளை பகிர்ந்துள்ளன. இந்த தொலைவில் மூன்று இடங்களில் அதிகாரப்பூர்வமாக நெடுஞ்சாலைகள் மூலம், இரு மாவட்டங்களுக்கும் போக்குவரத்து நடக்கிறது. ஐந்து இடங்களில் மலைப்பாதை போக்குவரத்து நடக்கிறது. கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் சரிபாதி கேரளாவில் பதிவாகி வருகிறது. நேற்று மட்டும் கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டியது.
இதேபோல் பல்வேறு வகை வைரஸ்களும் தீவிரமாக பரவி வருகின்றன. கேரள சுகாதாரத்துறை மிகவும் மந்தகதியில் செயல்படுகிறது. தமிழகம், கேரளா இடையே, தேனி மாவட்டம் வழியாக தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சென்று வருகின்றனர். இவர்கள் மூலம் தேனி மாவட்டத்தில் வைரஸ் பரவாமல் தடுப்பது சாத்தியமில்லாத ஒன்று ஆகும். மழையால் வைரஸ் பரிசோதனைகளை எல்லைப்பகுதியில் நடத்தவே முடியவில்லை. இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனா அச்சம் தொடர்கிறது என தேனி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.