கொரோனா 3வது அலை வரும் ஆனா, பாதிப்பு இருக்காது, பள்ளிகள் திறப்பு சாத்தியமா ?
கொரோனா மூன்றாவது அலை பயத்தில் நாடேஇருக்கும் நிலையில், பள்ளிகளை திறப்பது சாத்தியமா? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதம் பள்ளிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிகள் திறப்பு சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இனி முழு லாக்டவுன் வருமா? வரதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தொடங்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உச்சத்தை எட்டும் நவம்பரில் முடிவுக்கு வரும். டிசம்பரில் முழு கட்டுக்குள் இருக்கும் என இதுவரை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
ஆனால் தற்போது சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்துார், திருப்பூர், சேலம், ஈரோடு, தஞ்சாவூர், கன்னியாகுமரி, நெல்லை உட்பட பல மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் மூலம் அந்தந்த பகுதிகளின் கொரோனா பரவலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மாநிலம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறைச்சி கடைகள் கூட தனித்தனியே செயல்பட வேண்டும் என உள்ளாட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக., பதினாறாம் தேதி முதல் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு கல்லுாரிகளை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் தொடர்புடைய அத்தனை பேருக்கும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை நேரடி வகுப்புகளை தொடங்க உத்தேசித்து உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த முரண்பாடான நிலை பொதுமக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒருபுறம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் நிலையில், மறுபுறம் பள்ளிகளை திறப்பது சாத்தியமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மூன்றாவது அலை எவ்வளவு பெரிய சவாலை கொடுத்தாலும் சந்திக்க தமிழக அரசு தயாராகவே உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மூன்றாவது அலை கடுமையாக இருக்காது என மருத்துவ நிபுணர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
காரணம் இந்தியாவில் மார்ச் மாதமே டெல்டா வகை கொரோனா பரவ தொடங்கியது. இரண்டாவது அலையில் ஏற்பட்ட பெரும் பாதிப்பிற்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் முழு காரணம். இப்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகில் நுாற்றி அறுபது நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது.
டெல்டா வகை கொரோனா வைரஸ்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இந்தியாவில் பரவலாக அறுபத்தி ஏழு சதவீதம் பேருக்கு உருவாகி விட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் சதவீத அளவு சில இ டங்களில் மாறலாம். ஆனால் அனைத்து இடங்களில் அறுபது சதவீதத்தை தாண்டியே எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டது.தவிர பல கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் இறுதிக்குள் இன்னும் பல கோடிப்பேருக்கு தடுப்பூசி போட்டு விடுவோம்.
அதனால் கொரோனா மூன்றாவது அலை டெல்டா வைரசால் பரவினால் நிச்சயம் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே பெரும் பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.
கொரோனா வைரஸில் புதிய பரிணாமம் ஏதாவது உருவானால் மட்டுமே இந்தியாவில் இனி இரண்டாவது அலை ஏற்படுத்தியது போல் பாதிப்பினை ஏற்படுத்த முடியும். இப்போதைக்கு கொரோனாவி்ல புதிய பரிணாமம் கண்டறியப்படவில்லை.
இதனால் மருத்துவ நிபுணர்கள் மூன்றாவது அலை இந்தியாவால் சமாளிக்க கூடிய வகையில் தான் இருக்கும் என அறிவுறுத்தி வருகின்றனர். எனவே நாடு முழுவதும் இன்னொரு முழு லாக்டவுனுக்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றே உறுதியாக கூறலாம்.
முதன் முறையாக லாக்டவுன் அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். இரண்டாவது அலை பரவலின் போது, அந்த பொறுப்பு மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டு விட்டன. தற்போது மூன்றாவது அலையில் மாவட்ட நிர்வாகங்களிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு விட்டது.
எனவே தான் மூன்றாவது அலை பரவலின் போது, சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் முடிவுகளை எடுத்து வருகின்றன. இன்னொரு முக்கிய விஷயம் தமிழக அரசு இதுவரை பள்ளிகளை திறப்பதாக உறுதியாக அறிவிக்கவில்லை.
செப்டம்பர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என மட்டும் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவுகளும் பரவும் மாவட்டங்களில் அதிக கட்டுப்பாடுகளுடனும், பரவல் குறைந்த மாவட்டங்களில் குறைவான கட்டுப்பாடுகளுடனும் அமல்படுத்தப்படும்.
அதேபோல் இனி ஒட்டுமொத்த லாக்டவுன் என்ற நிலைப்பாட்டினை எடுக்காமல் (அவசியம் வந்தால் எடுக்கப்படும்) முடிந்த வரை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலேயே சூழலுக்கு ஏற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்கி, பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.