தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் கேரளாவிற்கு கடத்த வசதியான சிவப்பரிசி விற்பனை

தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் தற்போது விநியோகிக்கப்படும் உருட்டை சிவப்பரிசியை கேரள மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்;

Update: 2021-11-27 09:15 GMT

தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் உருட்டை ரக சிவப்பரிசி.

தேனி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கேரளாவிற்கு கடத்த வசதியான, (கேரள மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடும்) உருட்டை சிவப்பரிசி  விற்பனை செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளில் அரிசி விநியோகத்தை முறைப்படுத்த அரசு எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், அதிகாரிகள் முதல் கடத்தல்காரர்கள் வரை ஒருங்கிணைந்த கூட்டணி வைத்திருப்பதால், ரேஷன் கடை முறைகேடுகளை தடுப்பது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினமும்  டன் கணக்கில்  ரேஷன் அரிசி கடத்திச்செல்வது வாடிக்கையான நிகழ்வாகும்.

கடத்தல்காரர்கள் யார்? எப்படி கடத்துகின்றனர்? இதற்காக ரேஷன்கடைகளில் என்ன மாதிரி தில்லுமுல்லு செய்கின்றனர் போன்ர முழுவிவரங்களும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தெரியும், தேனி மாவட்ட வழங்கல்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கும் தெரியும். இருப்பினும் யாரும் கண்டுகொள்வில்லை என்பது வேறு விஷயம்.

இதுநாள் வரை தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட அரிசியில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே கேரளாவிற்கு கடத்தப்பட்டது. ஆனால் இந்த மாதம் விநியோகிக்கப்படும் அரிசியில் பெருமளவு கேரளாவிற்கு தான் செல்லும். காரணம் தேனி மாவட்ட மக்களின் உணவுப்பழக்கத்திற்கு ஒவ்வாத, அதே நேரம் கேரள மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருட்டை சிவப்பரிசி ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுகிறது.

இதுவரை இப்படிப்பட்ட அரிசி ரேஷன் கடைகளுக்கு சப்ளையானது இல்லை என ரேஷன் கடை பணியாளர்களே ஒப்புக்கொள்கின்றனர். இந்த மாதம் விநியோகிக்கப்படும் அரிசி ஏன் இப்படி வந்தது என்பதன் ரகசியம் யாருக்கும் தெரியவில்லை. ஒரு வேளை கடத்தல்காரர்கள் மேல்மட்ட அளவில் தகுதியான அதிகாரிகளை வளைத்து போட்டு விட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News