வைகை ஆற்றில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்த நீர்வரத்து..!

வைகை ஆற்றில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக ஆண்டுக்கு நான்கு மாதங்கள் நீர் வரத்து இருந்து வருகிறது.

Update: 2023-12-14 04:14 GMT
ஆண்டிபட்டி வைகை ஆறு.

மேகமலை வனப்பகுதியில் பெய்யும் மழையால் தேனி வைகை நதியில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக நீர் வரத்து நான்கு மாதங்களை கடந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வைகை நதியின் நீர் பிடிப்பு ஆதார பகுதியான மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வைகை நதியில் தொடர்ந்து நீர் வரத்து இருந்து வருகிறது.

இது குறித்து மேகமலை வனவிலங்குகள் காப்பக வார்டன் அதிகாரிகள் கூறியதாவது: வைகை நதியில் ஆண்டுக்கு 9 மாதங்கள் நீர் வரத்து இருக்கும். கடந்த 20 ஆண்டுகளாக நீர் வரத்து மெல்ல, மெல்ல குறைந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று மாதம் நீர் வரத்து இருந்தது. அதன் பின்னர் மேலும் குறைந்தது. முல்லை பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் நீர் மூலமே வைகை அணை நிறைந்தது. இந்த நீர் மூலம் ஐந்து தென் மாவட்டங்களுக்கு குடிநீருக்கும், பாசன தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

வைகை நதியில் நீர் வரத்து குறைந்து 2017 ம் ஆண்டில் பதினேழு நாட்கள் மட்டுமே நீர் வரத்து இருந்தது. 2018 ம் ஆண்டில் நீர் வரத்து முழுமையாக இல்லாமல் இருந்தது. தற்போது அடுத்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் மேகமலை வனப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேகமலையில் உள்ள அத்தனை அணைகளும் நிரம்பி விட்டன.

நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை நதியில் நான்கு மாதங்களை கடந்து தொடர்ந்து நீர் வரத்து இருந்தது. அப்போது முதல் தற்போது வரை தொடர்ச்சியாக நான்கு மாதங்களை கடந்து நீர் வரத்து இருந்து வருகிறது. நான்காவது ஆண்டாக நீர் வரத்து நான்கு மாதங்களை கடந்துள்ளது. மேகமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்ட பின்னர், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் வழக்கம் போல் ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் நீர் வரத்தை எதிர்பார்க்கலாம். மேகமலை பாதுகாப்பினை பலப்படுத்தினால் இந்த நிலையை இன்னும் சில ஆண்டுகளில் எட்டி விடலாம்.  குறிப்பாக ஆண்டு தோறும்  வைகை நதியின் நீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு சில நாட்களுக்கு முன்னர்  வைகை அணை முழு கொள்ளவான எழுபத்தி ஒரு அடியை எட்டியது. தற்போது வரை நீர் மட்டம் ௬௫ அடி என்ற சீரான நிலையில் இருந்து வருகிறது. 

இந்த ஆண்டு முல்லை பெரியாற்றில் இருந்து வைகை அணைக்கு வந்த நீரை விட, வைகை ஆற்றில் இருந்து வந்த நீர் தான் அதிகம்.இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்ய முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மழை தொடர்ந்தால் இந்த மாதம் முழுக்க தண்ணீர் வரும் வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News