தேனி நகர திமுக செயலாளர் பதவிக்கு போட்டா போட்டி: மிரண்டு போன தங்கதமிழ்செல்வன்
தேனி நகர செயலாளர் பதவி கேட்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தேனி நகர செயலாளர் பாலமுருகன் தனது மனைவி ரேணுப்பிரியாவை பதவி விலக சொல்ல மாட்டேன். நாங்கள் தான் நகராட்சி தலைவர் என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இதனால் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்படி நடவடிக்கை எடுத்தால் அடுத்த நகர செயலாளர் யார் என்ற போட்டி தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள போட்டியை பார்த்து, வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வனே மிரண்டு போய் உள்ளார்.
நகர செயலாளர் பதவி கேட்டு பல சீனியர்களும் பல இறங்கி உள்ளனர். அதில் குறிப்பானவர் ஜீவா. இவர் தேனி நகரம் முழுக்க அறிமுகம் ஆனவர். எந்த கெட்ட பெயரும் இல்லாதவர். கட்சியில் பல ஆண்டு உழைத்தவர். இரண்டு முறை எம்.எல்.ஏ., சீட் இவருக்கு வழங்க தி.மு.க., தலைமை பரீசீலித்தது. கடைசி நொடியில் வாய்ப்புகளை இழந்தவர். இதனால் இவர் மீது தி.மு.க., தலைமைக்கே ஒரு அனுதாபம் உண்டு. குறிப்பாக இவர் சார்ந்த சமூகத்தினர் அல்லிநகரத்தில் மிக, மிக அதிகமாக உள்ளனர். இவரை கட்சி நகர செயலாளராக தேர்வு செய்தால், கட்சி வளர்ச்சி அபாரமாக இருக்கும் என சீனியர்களே பலரும் விரும்புகின்றனர்.
அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் நாராயணபாண்டி. இவர் தொடர்ச்சியாக நான்காவது முறையாக கவுன்சிலர் பதவியை வென்றுள்ளார். பலமுறை நகராட்சி தலைவர் பதவி கேட்டு வாய்ப்பு இழந்துள்ளார். இவர் சார்ந்த சமூகம் தேனியில் பதினான்கு வார்டுகளி்ல் தி.மு.க., கவுன்சிலர்களை தேர்வு செய்யும் அளவுக்கு பலம் மிகுந்தது. தவிர எம்.எல்.ஏ., தேர்தலிலும், எம்.பி., தேர்தலிலும் கட்சியினருக்கு இவர் அதிக ஓட்டுகள் வாங்கி கொடுத்துள்ளார். இவரது சமூகம் மட்டுமின்றி, பிற சமூகத்திலும் இவருக்கு பெரும் மரியாதை உள்ளது. மிகவும் அமைதியானவர். கடுமையாக உழைப்பவர். எந்த வம்புக்கும் செல்லாதவர் என்று தி.மு,க., தலைமையின் குட்புக்கில் உள்ளார்.
இதேபோல் சீட் கேட்டு வரிசையில் நிற்பவர்களுக்கு பல சிறப்புகள் உள்ளன. இதனால் முடிவு எடுக்க முடியாமல் தலைமை திணறுகிறது. இதனை கட்சி தலைமை நிர்வாகிகளே வெளிப்படையாக கூறுகின்றனர்.