முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக தீர்மானம்: ஊராட்சி தலைவர் தலைவர் மீது வழக்கு

முல்லைப்பெரியாறு அணையினை உடைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய வெள்ளிய மட்டம் ஊராட்சி தலைவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட உள்ளது.

Update: 2022-10-01 13:05 GMT

முல்லைப்பெரியாறு அணை.

கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதால், பேபி அணையை பலப்படுத்தி விட்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம். கேரள மாநில அரசுக்கு தீர்ப்பின் முழு விவரமும் தெரிந்த பின்னரும் அதை அமல்படுத்த இதுவரை முன் வரவில்லை.

கேரள அரசின் மீது உச்சநீதிமன்றமும்தாமாக முன்வந்து எவ்வித அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சேவ் கேரளா பிரிகேட் தலைவரான வழக்கறிஞர் ரசல் ஜோய் விடுத்த கோரிக்கையின்படி, கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா வட்டத்தில் உள்ள, வெள்ளிய மட்டம் ஊராட்சியில் கடந்த வாரம் முல்லைப் பெரியாறு அணையினை உடைக்க வேண்டும், இதற்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

15 உறுப்பினர்களைக் கொண்ட ஊராட்சியில், அதன் தலைவரான இந்து பிஜு முன்மொழிந்த புதிய அணைக்கான தீர்மானத்தை, துணைத் தலைவர் உள்ளிட்ட 14 உறுப்பினர்களும் வழிமொழிந்து ஆதரித்தது மட்டுமல்லாது, தீர்மானத்தை நிறைவேற்றவும் செய்தனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கூறுகையில், இது கண்டிப்பாக உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதுகுறித்து கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கடிதம் அனுப்ப உள்ளோம். முறையான பதில் வரவில்லை என்றால், வெள்ளிய மட்டம் ஊராட்சியின் தீர்மான நகலை கையில் எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என  அறிவித்துள்ளது.

இதற்கிடையில் இந்த சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று நாளை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பல கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபைகளில் முல்லைப்பெரியாறு அணையினை பாதுகாக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் போன்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

Tags:    

Similar News