தேனியில் பலமான எதிரியை சந்திக்கிறது காங்..!

தேனி லோக்சபா தொகுதியில் காங்., கட்சி மிகவும் பலமான எதிரியை சந்திக்கிறது.

Update: 2024-03-12 05:52 GMT

டிடிவி.தினகரன் (கோப்பு படம்)

தேனி லோக்சபா தொகுதி தி.மு.க., கூட்டணியில் மீண்டும் காங்., கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க., அசுர பலம் பெற்று உள்ளது. இருப்பினும் நேரடியாக களம் இறங்க தயக்கம் காட்டி வருகிறது. வழக்கம் போல் இம்முறையும் தேனி தொகுதியை தனது கூட்டணி கட்சியான காங்., கட்சிக்கு ஒதுக்கி உள்ளது.

பலமான கூட்டணியில் தேனி தொகுதி கிடைத்ததால் சீட் பெற பெரும் போட்டி நடக்கிறது. அக்கட்சியின் முக்கிய தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி., ஆருண், தேனி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி சங்கரநாராயணன், டாக்டர் தியாகராஜன் என பலர் எம்.பி., சீட் பெற முட்டி மோதி வருகின்றனர்.

இதில் யாருக்கு லக் அடிக்கப்போகிறது என்று தெரியவில்லை. அதே நேரம் இந்த தொகுதியில் பா.ஜ.க., கூட்டணியில் டி.டி.வி., தினகரன் குக்கர் சின்னத்தில் களம் இறங்குவார் என்ற பலமான பேச்சு அடிபடுகிறது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் எனவும் தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

அ.தி.மு.க., மூன்று கட்சிகளாக உடைந்துள்ளதாலும், பா.ஜ.க.,வுக்கு பலமான கூட்டணி இல்லாததாலும், எளிதில் தேனியில் வெற்றி பெறலாம் என காங்., கணக்கு போட்டியிருந்தது. ஆனால் யானை போல் அசுர பலத்துடன் டி.டி.வி., தினகரளை பா.ஜ.க., களம் இறக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இதனால் மிகவும் அசுர பலம் வாய்ந்த வேட்பாளருடன் காங்., மோதும் நிலை உருவாகி உள்ளது. தினகரன் தேனி தொகுதியில் அசுர செல்வாக்கு பெற்ற ஒரு அரசியல் தலைவர். ஒரு முறை தொகுதி எம்.பி.,யாக இருந்த போதும், இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த போதும், தேனி லோக்சபா தொகுதிக்கு நிறைய செய்துள்ளனார்.

தொகுதிக்கு பரிச்சயமானவர். எனவே டி.டி.வி., தினகரன் தேனி தொகுதியில் இப்போதைய முதல்கட்ட நிலவரத்தில் சற்று முந்தி தான் நிற்கிறார். இதனை பொதுமக்கள் பலரும் வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கின்றனர். தேனி தொகுதியில் காங்., கட்சிக்கு பெரிய அளவில் பலம் இல்லை. ஆனால் அசுர பலம் கொண்ட தி.மு.க., கூட்டணி தான் அக்கட்சிக்கு சாதகம். எனினும் தேர்தல் பணிகளில் யார் முந்துகிறார்கள் என்பதை பொறுத்து தான் வெற்றி இருக்கும் எனவும் பலரும் கணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News