தேனி லோக்சபா தொகுதி காங்., தீவிர முயற்சி..! தேர்தல் கண்ணோட்டம்..!

வரும் லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட காங்., தீவிரமாக முயற்சித்து வருகிறது.;

Update: 2024-01-07 05:12 GMT

Election-2024-தேர்தல் செய்தி (கோப்பு படம்)

தேனி லோக்சபா தொகுதியில், காங்., எம்.பி., ஆருண் இரண்டு முறை வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் தற்போதய எம்.பி., ரவீந்திரநாத் மிகுந்த நெருக்கடிக்கு பின்னரே வெற்றி பெற்றார். தேனி தொகுதியில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி, மாறி வெற்றியும் பெற்றுள்ளன.

ஆனால் எப்போதும் தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட தி.மு.க., பெரிய அளவில் ஆர்வம் காட்டியதில்லை. தகுதியான வேட்பாளர்கள் தி.மு.க.,வில் இருந்தாலும், என்னவோ  தேனி தொகுதியை கூட்டணி கட்சியான காங்., கட்சிக்கு ஒதுக்கவே ஆர்வம் காட்டி வருகிறது.

தி.மு.க.,வின் மனநிலையை உணர்ந்து கொண்ட காங்., எப்படியும் தேனி தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என மிகவும் கடுமையாக முயற்சித்து வருகிறது. அ.தி.மு.க., மூன்றாக (அ.தி.மு.க., ஓ.பி.எஸ்., டி.டி.வி., தினகரன்) பிரிந்துள்ள நிலையில், தேனி தொகுதியில் கடும் போட்டி இருக்காது. பா.ஜ., தேனி தொகுதியில் கடுமையான மோதலை ஏற்படுத்தாது, எனவே எளிதாக வென்று விடலாம் என காங்., கணக்கு போட்டுள்ளது.

தேனி தொகுதி வெற்றிக்கு பலமான தி.மு.க.,வும் விடுதலைச்சிறுத்தைகளும் கை கொடுப்பார்கள். தவிர சிறுபான்மையினர் வாக்குகள் சிதறாமல் விழும். எனவே,  தேனி தொகுதியை எளிதில் கைப்பற்றி விடலாம் என காங்., கணக்கு போட்டுள்ளது. காங்., வேட்பாளராக தேனியை சேர்ந்த பாரம்பரிய குடும்பமான என்.ஆர்.டி., குடும்பத்தை சேர்ந்த டாக்டர் தியாகராஜன் கடுமையாக முயற்சித்து வருகிறார். விருதுநகர் எம்.பி., மாணிக்தாகூரும் தேனி தொகுதி மீது ஒரு கண் வைத்துள்ளார்.

இருவரும் முயற்சித்தாலும், டாக்டர் தியாகராஜன் தேனி தொகுதி காங்., வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என ராகுல்காந்தியை நேரில் சந்தித்து பேசியும் விட்டார் என தேனி காங்., கட்சியினர் கூறி வருகின்றனர். ஏற்கனவே டாக்டர் தியாகராஜனின் அம்மாவிற்கு தேனி நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், அதிரடியாக தி.மு.க., கைப்பற்றியதை ராகுல்காந்தியிடம் நினைவூட்டிய டாக்டர் தியாகராஜன், இந்த முறை எந்த குழப்பமும் வராமல் தொகுதியை பெற்றுத்தர வேண்டும் என வலுவாக எடுத்துரைத்துள்ளார் என காங்., கட்சியினர் கூறி வருகின்றனர். தேர்தல் நெருங்க... நெருங்க... இன்னும் பரபரப்புகள் அதிகரிக்கும் எனவும் காங்., கட்சியினர் கூறுகின்றனர்.

Tags:    

Similar News