நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கும் கேரள அரசைக்கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்
முல்லைபெரியாறு அணை விஷயத்தில் நேர்மையாக செயல்படும் அதிகாரிகளை பழிவாங்கும் கேரள அரசை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்;
முல்லைபெரியாறு அணை விஷயத்தில் நேர்மையாக செயல்படும் அதிகாரிகளை பந்தாடும் கேரள அரசினை கண்டித்து ஓரிரு நாளில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது: முல்லை பெரியாறு அணையில் இருந்து பேபி அணைக்கு செல்லும் வழியில் உள்ள 15 மரங்களை வெட்ட எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கிய, கேரள பிரின்ஸ்சிபல் சீப் கன்சர்வேட்டர் ஆப் பாரஸ்ட் பென்னிகர்தோமஸ்-ஐ சஸ்பெண்ட் செய்த கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தனது செயலில் உள்ள நியாயத்தை விளக்க ஐ.எப்.எஸ்., அதிகாரி பென்னிகர்தோமஸ் பலமுறை அமைச்சரை சந்திக்க முயன்றும், சசீந்திரன் சந்திக்க மறுத்து வருகிறார். ஒரு அரசின் மிகுந்த பொறுப்புள்ள உயர் பதவி வகிக்கும் ஒரு அரசு அதிகாரி கூடுதல் தலைமை செயலாளர் கூடும் கூட்டத்தில் கலந்து கொண்டு, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கிறார்.
இந்த கூட்டத்தை, கேரள மாநில தலைமை வனக்காவலர் கூட்டவில்லை. நவம்பர் முதல் தேதி திருவனந்தபுரத்தில் கேரள தலைமைச்செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தை, கேரள மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தான் கூட்டினார். பெரியாறு புலிகள் காப்பக டெபுடி டைரக்டர் சுனின்பாபுவும் கலந்து கொள்கின்றனர். இதே போல் பல உயர் அதிகாரிகள் கூடி எடுத்த முடிவு தான், 15 மரங்களை வெட்ட தமிழகத்திற்கு அனுமதித்த முடிவு.
இந்த அனுமதி முடிவு கம்பத்தில் உள்ள பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தான் இந்த அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இதனை மறைக்க கேரள மாநில அரசு பென்னிகர்தோமஸை பலிகடா ஆக்கி உள்ளது. அவரை மேலும் பல இடங்களில் பந்தாடவும் திட்டமிட்டு வருகிறது. கேரள அரசுக்கு இத்தனை வன்மம் தேவையில்லை. கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரனுக்கு இத்தனை வன்மம் தேவையில்லை.
கேரள மக்களிடம் பினராயி விஜயன் அரசு நிர்வாக ரீதியாக பல்வேறு தோல்விகளை தழுவி விட்டது. இதனை மறைக்க முல்லை பெரியாறு பிரச்னையை கிளப்பி, பெரிதாக்கி மக்களை திசைதிருப்பும் வேலைகளை செய்து கொண்டு உள்ளது. இந்த சதிவேலைகள் எதுவும் முல்லை பெரியாறு அணை விஷயத்தில் எடுபடாது என்பது அனைவருக்கும் தெரியும்.
தமிழகத்தை நம்பித்தான் கேரளம் உள்ளது என்பதை அந்த மாநில அரசு முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் நினைத்தால் கேரள அரசினை ஆட்டங்காண செய்து விடுவோம். கேரள வனத்துறை அதிகாரி பென்னிகர்தோமஸ் மிகவும் நேர்மையானவர். அவரை ஆதரித்து இன்னும் இரண்டு நாட்களில், கேரள அரசுக்கு எதிராக எதிர்ப்பினை பதிவு செய்ய இருக்கிறோம். அதிகாரி பென்னிகர்தோமஸ்க்கு உரிய நீதியை பெற்றுத் தருவதில் எந்த பாரபட்சமும் இன்றி நடப்போம் என்று அவர் கூறினார்.