தேனி மாவட்டத்தில் வீடு, வீடாக காய்ச்சல் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணி தொடக்கம்
தேனி மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணி நடந்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. ஆனால் பரவி வரும் பல்வேறு வகை காய்ச்சல்களை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று காய்ச்சல் நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கி உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகளில், யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பரிசோதனைக்கு வந்தவர்களில் பலருக்கு வேறு வகையான காய்ச்சல்கள் உள்ளன. குறிப்பாக தேனி மாவட்டத்தில் தற்போது டெங்கு அதிகம் பரவுகிறது.
தவிர குடிநீரினால் பரவும் ஒரு வகை புளூ காய்ச்சலும் பரவுகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க கொசு பரவலை கட்டுப்படுத்த வேண்டும். குடிநீரில் பரவும் காய்ச்சலை தடுக்க குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த பின்னர் குடிக்க வேண்டும். தற்போது கிராமம் தோறும் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதித்த நபர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.