முல்லைப்பெரியாறு அணையை காவல் காக்கும் கர்னல் பென்னிகுயிக் ஆன்மா

Mullaperiyar Dam Tamil Nadu - முல்லைப்பெரியாறு அணையை அதனை கட்டிய கர்னல் பென்னிகுயிக் ஆன்மா பாதுகாத்து வருவதாக நம்பப்பட்டு வருகிறது.;

Update: 2022-09-06 05:58 GMT

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னி குயிக்.

Mullaperiyar Dam Tamil Nadu -பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள வித்தியாசமான மற்றும் சுவராஷ்யமான அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதை மட்டுமே தங்கள் தேர்தல் நேர வாக்குறுதிகளாக கூறும் சில முன்னாள் எம்.எல்.ஏ க்களின் பரிதாபகரமான இன்றைய நிலைமை வருத்தத்தை அளிக்கிறது. ஒரு தமிழனாக பிறந்திருந்தாலும் முல்லைப் பெரியாறு அணைக்கெதிராக விஷம் தோய்ந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தும் தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜேந்திரனின் இன்றைய நிலைமை மிகவும் வருத்தத்திற்குரியது. 2006, 2011, 2016 என்று தொடர்ந்து மூன்று முறை தேவிகுளத்தில் உள்ள 84 விழுக்காடு பச்சை தமிழர்களால் கேரள சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர் இந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., ராஜேந்திரன். தமிழ்நாட்டில் சாதி வெறி தலை விரித்து ஆடுவதாகவும்,இன்னும் பல நடக்காத விஷயங்களை பற்றி என்னிடமே பலமுறை எகத்தாளம் செய்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலத்தில், பெரியாறு அணையை அடுத்து இருக்கும் வண்டிப் பெரியாறு நகரத்திற்கு வந்து, அணையை உடைக்கும் வரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று 14 நாட்கள் ஒரு நாடகத்தை நடத்தினார். இடுக்கி மாவட்டத்து தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், 15-வது நாள் பெட்டியை கட்டிக்கொண்டு தேவிகுளத்திற்கு சென்றார். தொழிலாளிகளுக்காக போராடுவதாக சொல்லும் இந்த ராஜேந்திரன், மூணாறு நகரில் குடியிருப்பது டாடா பெருமுதலாளி கட்டிக் கொடுத்த சொகுசு வீட்டில்.இவரது நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த கட்சி மேலிடம் இவரை கை விட்டது. அதுவரை ராஜேந்திரனோடு பயணித்த இடுக்கி மாவட்டத்து கம்யூனிஸ்ட் தமிழர்கள், இன்று அவரை கவனமாக கைவிட்டனர்.

ஒரு காலத்தில் பிஜுமோள் என்றால் மொத்த கேரளமும் அலறும். பீர்மேடு தாலுகாவில் அவர் வைத்தது தான் சட்டம். 2006, 2011 மற்றும் 2016 என மூன்று முறை பீர்மேடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்த பிஜுமோள் நினைத்த மாத்திரத்தில் முல்லைப் பெரியாறு அணைக்குள் புகுந்து அங்கிருக்கும் தமிழக அதிகாரிகளின் மீது கை வைக்கும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவராக இருந்தார் ஒரு காலத்தில் அணையில் பணியில் இருந்த தமிழக பொறியாளரான மாதவனை இவர் தாக்கிய சம்பவமும் நடந்தது. 

இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கோ,  காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கோ இந்த பிஜிமோள் வந்தால் அலுவலகங்கள் அலறும். கடந்த 2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணைக்கெதிராக, ஆக்கிரமிப்பாளர்கள் நிறைந்த சப்பாத்து கிராமத்தில் நடந்த தொடர் உண்ணாவிரதத்தில் இவர் பெரியாறு அணைக்கு எதிராக பேசிய பேச்சு கொடூரத்தின் உச்சக்கட்டம். ஜனநாயகத்தின் வரைமுறையை இந்த பிஜிமோள் எந்தக் காலத்திலும் பின்பற்றியதில்லை.ஆனால் கடந்த முறை பீர்மேடு சட்டமன்றத் தொகுதியில் சீட் மறுக்கப்பட்ட பிஜுமோளின் இன்றைய நிலை பரிதாபகரமானது. சட்டமன்ற உறுப்பினர் பதவி தான் இல்லை. எனக்கு இடுக்கி மாவட்டச் செயலாளர் பதவியாவது வேண்டும் என்று முகநூலில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் இவர் போட்ட பதிவு மொத்த கேரளத்தையும் உலுக்கியது. கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஆணாதிக்கம் தலைவிரித்து ஆடுவதாக பதிவிட்ட இந்த ப் பிஜுமோள், தான் National federation of Indian women என்கிற கட்சியின் பெண்கள் அமைப்பில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பதாகவும், அந்த அமைப்புதான் தன்னை மாவட்ட செயலாளராக முன்னிறுத்தியது என்றும் புலம்பித் தீர்த்தார்.

முற்போக்காளர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் பெரும்பாலான அரசியல்வாதிகளின் அணுகுமுறை நூறு விழுக்காடு பெண்களுக்கு எதிராக இருப்பதாக குற்றம்சாட்டினார். National federation of Indian women அமைப்பு குறைந்தபட்சம் ஒரு பெண்ணையாவது கேரளாவில் மாவட்ட செயலாளராக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததாகவும், கட்சி அதற்கு தடை போட்டதாகவும் கதறி வருகிறார். முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக சப்பாத்து கிராமத்தில் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் நடந்த உண்ணாவிரதத்தில் இந்த பிஜிமோள் குறைந்தது 100 முறையாவது கலந்திருப்பார். தொடர்ந்து மூன்று முறை பீர்மேடு சட்டமன்ற உறுப்பினராக இந்த பிஜுமோளின் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது. முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக பேசிய, எழுதிய, கதறிய எவரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்கிற பட்டியலில் எட்டாவது நபர் இந்த பிஜுமோள்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னிகுயிக் என்கிற மாமனிதன் செய்த மகத்தான தியாகம், ராஜேந்திரன்,  பிஜிமோள் போன்றவர்களின் தலைவிதியை மாற்றி விட்டிருக்கும் போலும். பெரியாறு அணை பற்றி பேசி இதுவரை வீழ்ந்த எட்டு பேரின் வாழ்க்கையை ஆய்வு செய்தால் பென்னிகுயிக் இன்னும் பெரியாறு அணையினை காவல் காக்கிறார் எனத்தான் நம்ப முடிகிறது. பென்னிகுயிக் ஆன்மாவால் வீழ்த்தப்பட்ட எட்டு பேருக்கும், வீழப்போகும் தற்போதைய விஷமிகளுக்கும் நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள். நாங்கள் பூச்சாண்டி காட்டவில்லை. நடந்த வரும். நடக்கப்போகும் சம்பவங்களை தான் பதிவிட்டுள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News