கூலி தொழிலாளர்கள் படும் துயரம் கலெக்டருக்கு புரியுமா?
தேனி சுற்றுக்கிராம கூலித்தொழிலாளர்கள், மற்றும் நோயாளிகளின் சிரமம் கலெக்டர் சஜீவனாவிற்கு புரியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
தேனி- மதுரை ரோட்டில் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இந்த இடத்தை கடந்து தான் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்ல முடியும். இந்த இடத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் 800 மீட்டர் தொலைவிலும், பழைய பேருந்து நிலையம் 1.5 கி.மீ., தொலைவிலும் உள்ளது.
இங்கிருந்து அரண்மனைப்புதுார், கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், நாகலாபுரம், வெங்கடாசலபுரம் செல்லும் ரோடும், கண்டமனுார் செல்லும் ரோடும் பிரிகிறது. இந்த ரோடு தான், தேனி ஒன்றிய கிராமங்களையும், மயிலாடும்பாறை கிராமங்களையும் தேனி நகருடன் இணைக்கிறது. தவிர இந்த பகுதியில் ஏராளமான ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உள்ளன.
மிக முக்கிய சந்திப்பாக இருப்பதால், இந்த இடத்தில் பல ஆண்டுகளாக பேருந்து நிறுத்தம் இருந்து வந்தது. பயணிகள் ஏறி, இறங்கும் வசதி கிடைத்ததால், விவசாய கூலி தொழிலாளர்களுக்கும், மருத்துவமனை செல்பவர்களுக்கும் நல்ல வசதி கிடைத்தது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த இடத்தில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றிருந்த போது, அந்த வழியாக தேனி கலெக்டர் சஜீவனா சென்றதாக கூறப்படுகிறது. வழக்கமாக பாலம் கட்டும் பணி நடப்பதால், அங்கு சற்று நெரிசல் இருக்கத் தான் செய்யும். தவிர ஒரு இடத்தில் பாலம் கட்டும் பணி நடந்தால், அந்த இடத்தில் முறையான மாற்றுப்பாதை வசதி செய்ய வேண்டும். இதனை அதிகாரிகள் செய்யவில்லை. ஆனால் செய்ததாக கணக்கு எழுதி விட்டனர்
இது தெரியாமல் அதிகாரிகளிடம் நெரிசலுக்கு காரணம் என்ன என கலெக்டர் விசாரித்தபோது, பாலம் கட்டும் பணி நடப்பதால் நெரிசல் இருக்கத்தான் செய்யும் என கூறியிருந்தால் பிரச்னை இல்லை. மாறாக கலெக்டரிடம் அதிகாரிகள் இங்கு பேருந்து நிறுத்தம் வைத்திருப்பதே நெரிசலுக்கு காரணம் என கூறி தங்களது தவறை மறைத்து விட்டனர்.
அதிகாரிகளின் தவறான தகவலை கேட்ட கலெக்டர் சஜீவனா, ‘‘இனி இங்கு பேருந்துகளை நிறுத்தாதீர்கள். ஒன்று பழைய பேருந்து நிலையம் அல்லது புதிய பேருந்து நிலையத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்’’ என வாய்மொழி உத்தரவிட்டார். இதனை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சுற்றறிக்கையாகவே கொடுத்து விட்டனர். அன்று முதல் பேருந்து நிறுத்தப்படுவதில்லை.
இதனால் விவசாய கூலி தொழிலாளர்களும், நோயாளிகளும் பழைய பேருந்து நிலையத்திலிருந்தோ, அல்லது புதிய பேருந்து நிலையத்திலிருந்தோ ஆட்டோ பிடித்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி வி்ட்டது. ஆட்டோ கட்டணம் கொஞ்சம் நஞ்சமல்ல... குறைந்த பட்சம் பகலில் 60 ரூபாய், இரவில் 100 ரூபாய். மொத்தமே 300 ரூபாய் வேலைக்கு செல்பவர்கள் ஆட்டோ கட்டணமாக 150 ரூபாய் தரமுடியுமா. மருத்துவமனை செல்பவர்கள் வழக்கத்தை விட கூடுதலாக 150 ரூபாய் செலவிட முடியுமா?
பாலம் கட்டும் பணி தொடங்கியதில் இருந்து அந்த இடத்தில் போக்குவரத்து சற்று மெதுவாகத்தான் நடக்கிறது. இதனால் அந்த இடத்தை கடக்க ஓரிரு நிமிடங்கள் ஆகிறது என்பது உண்மை தான். ஆனால் அது ஒன்றும் மிகவும் பரபரப்பான இடம் இல்லை. பேருந்து நிறுத்தம் வைப்பதற்கு மிகவும் உகந்த இடம். மக்களின் சிரமங்களையும், தொழிலாளர்கள், நோயாளிகளின் சிரமங்களையும் சற்றும் பரிசீலிக்காமல் உத்தரவிட்ட கலெக்டர் சஜீவனாவிற்கு எப்படி இவர்கள் சிரமம் புரியாமல் போனது என தெரியவில்லை. அதிகாரிகளும் இதனை கலெக்டரிடம் விளக்கி சொல்லவில்லை.
கலெக்டர் சஜீவனாவிற்கு அதிகாரிகள் மக்களின் பிரச்னைகளை எடுத்துக் கூறி அந்த இடத்தில் நெரிசல் ஏற்படாமல் தடுக்க போக்குவரத்து காவலர்களை நிறுத்தி, மீண்டும் பஸ்கள் நின்று செல்ல உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.