போடியில் உச்சகட்ட மோதல்: ஓ.பி.எஸ் - தங்க.தமிழ்செல்வன் போஸ்டர் யுத்தம்

போடியில் தங்க.தமிழ்செல்வன்- ஓ.பி.எஸ்., இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இரு தரப்பிலும் போஸ்டர் யுத்தம் தொடங்கி உள்ளது.

Update: 2021-07-31 09:30 GMT

போடியில் தங்க.தமிழ்செல்வனுக்கும், ஓ.பி.எஸ்-க்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் பரஸ்பரம் தாக்கி சுவரொட்டி ஒட்டும் அளவுக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள மோதல் அரசியல் களத்தில் பரபரப்பை உருவாக்கி வருகிறதது.

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் இருக்கும் போதே ஓ பன்னீர்செல்வத்திற்கும், தங்க.தமிழ்செல்வனுக்கும் ஆகாது. இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்தனர். தற்போது தங்க.தமிழ்செல்வன் தி.மு.க.,வில் உள்ளார். அதுவும் கடந்த சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் ஓ.பி.எஸ்.ஐ எதிர்த்து, தி.மு.க. சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். கடும் போட்டி நிலவினாலும் ஓ.பி.எஸ். குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டார். இருப்பினும் தி.மு.க ஆளும் கட்சியாக வந்து விட்டது. இதனால் முதல்வர், துணை முதல்வர் பதவிகளை வகித்த ஓ.பி.எஸ். தற்போது எம்.எல்.ஏ., அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளர் என்ற அந்தஸ்த்துடன் இருக்கிறார்.

தங்க.தமிழ்செல்வன் ஆளும் கட்சியான தி.மு.க வின் வடக்கு மாவட்ட செயலாளர் என்ற அந்தஸ்த்துடன் இருக்கிறார். ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர் என்ற வகையில் போடியில் வீடு எடுத்து தங்கியிருந்தார். அத்தனை முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அரசு அதிகாரிகளை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார். இதனால் எம்.எல்.ஏ.,வாக உள்ள ஓ.பி.எஸ்- க்கு போடி தொகுதியில் வேலையில்லாமல் போனது.

இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு ஓ.பி.எஸ் எதுவுமே செய்யவில்லை என தங்கதமிழ்செல்வன் பேட்டி கொடுத்தார். பதிலுக்கு தான் செய்த பணிகளை பற்றி ஓ.பி.எஸ் பட்டியலிட்டார். இருதரப்பிற்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்து, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டும் அளவுக்கு அதிகரித்து விட்டது. இன்று காலை போடி அ.தி.மு.க. நகர செயலாளர் வி.ஆர். பழனிராஜ், தங்க.தமிழ்செல்வனை தகாத வார்த்தைகளால் திட்டி பேட்டி கொடுத்தார்.

பதிலுக்கு தி.மு.க.வினர், ஓ.பி.எஸ். கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். பின்னர் முடிவை மாற்றிக் கொண்டு, கண்டன சுவரொட்டிகளை ஒட்டினர். அ.தி.மு.க.வினரும் பதிலுக்கு கண்டன சுவரொட்டிகளை ஒட்டினர். இந்நிலையில், ஓ.பி.எஸ்., போடியில் இருக்கும் போதே அங்கு நடந்த ரத்த தான முகாமிற்கு தங்க.தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். இப்படி மாறி, மாறி இருவருக்கும் இடையே நடைபெறும் மோதல் அரசியலை ஆர்வத்துடன் அரசியல் நோக்கர்கள் கவனித்து வருகின்றனர்.



Tags:    

Similar News