தேனியில் சுத்தமான போலீஸ் ஸ்டேஷன்: பரிசு கொடுத்து அசத்திய டிஜிபி
தேனியில் முதல்வர் பாதுகாப்பு பணிக்கு வந்த டிஜிபி சைலேந்திரபாபு க.விலக்கு போலீஸ் ஸ்டேஷனை ஆய்வு செய்து பரிசு வழங்கி பாராட்டினார்.;
முதல்வர் ஸ்டாலின் இன்று தேனிக்கு வந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்று மதியம் 12 மணிக்கு திண்டுக்கல் புறப்பட்டு சென்றார். முதல்வர் பாதுகாப்பு பணிக்காக டி.ஜி.பி.,சைலேந்திரபாபு இரண்டு நாட்களாக தேனியில் தங்கியுள்ளார். அவர் மாவட்டம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்கள், போலீஸ் குடியிருப்புகளை ஆய்வு செய்தார்.
தேனி அருகே உள்ள க.விலக்கு போலீஸ் ஸ்டேஷனை ஆய்வு செய்தார். ஸ்டேஷன் மிகவும் சுத்தமாக இருந்தது. ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டிருந்தன. கைதிகளை தங்க வைக்கும் அறை கூட மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு ஆச்சர்யம் அடைந்த டி.ஜி.பி., சைலேந்திரபாபு, ஸ்டேஷன் எஸ்.ஐ., சரவணன் மற்றும் போலீசாரை அழைத்து 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்தார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.