தேனியில் தாரளமாக வலம் வரும் போலி தண்ணீர் பாட்டில்கள்
தேனியில் மீண்டும் போலி தண்ணீர் பாட்டில் புழக்கம் அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாமல் உள்ளது
தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் நகராட்சி தண்ணீரை பாட்டில்களில் அடைத்து போலி மினரல் வாட்டர் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்தவர்களை கடந்த மாதம் தேனி நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகளும், உணவுப்பொருள் கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரிகளும் பிடித்தனர்.
அதன் பின்னர் போலி மினரல் வாட்டர்கள் வேறு பல இடங்களில் நடந்து வருவது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.ஆனால் தேனி நகராட்சி நிர்வாக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக இன்னும் புதிய பஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு கடைகள், டாஸ்மாக் பார்களில் போலி தண்ணீர் பாட்டில் தான் விற்பனையாகிறது. இவர்கள் நகராட்சி தண்ணீரை பிடித்தே பாட்டிலில் அடைத்து விற்கின்றனர்.
நகராட்சி அனுமதியின்றி நகராட்சி தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பதும் குற்றம். தவிர அதில் மிரனல் வாட்டர் என போலி முத்திரை ஸ்டிக்கர் ஒட்டி விற்பதும் குற்றம். இப்படி செய்பவர்களுக்கு பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் இருப்பதால் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
போலி தண்ணீர் பாட்டில் விற்கும் கும்பல் உடைக்கப்படாத தண்ணீர் பாட்டில் மூடிகளையும், போலியான காலிபாட்டில்களையும் வைத்துள்ளனர். இது குறித்து போட்டோ ஆதாரங்களுடன் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.