நிலங்களின் மதிப்பீடு மாற்றம்: பதிவுத்துறை தலைவர் கடிதம்
பதிவுத் துறைத்தலைவர் அலுவலகத்தில் இருந்து சார் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பதிவுத் துறைத்தலைவர் அலுவலகத்தில் இருந்து சார் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“தமிழகத்தில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரஅடியிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிகமிகக் குறைவாக உள்ளன.
வங்கிகள் வழிகாட்டி மதிப்பையொட்டியே கடன் வழங்கும். இதனால் மனை நிலம் வாங்குவோர் வங்கிகளில் தேவையான அளவுக்கு கடன் பெற முடியாத நிலை உள்ளது. இதைத் தவிர்க்கவும் வழிகாட்டியில் குறைந்தபட்ச மதிப்பை நிர்ணயிக்கவும் ஆக.16-ம் தேதி மைய மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதத்துக்குப்பின் குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச குடியிருப்பு மதிப்பை பொறுத்தவரை சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியில் சதுரஅடி ரூ.1000, ஆவடி, தாம்பரம், ஓசூர் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.800, ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.700, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், கரூர் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.600, தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சிகளில் சதுரஅடி ரூ.500, கடலூர் மாநகராட்சியில் சதுரஅடி ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள மனைகளுக்கு சதுரஅடி ரூ.300, அனைத்து பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு சதுரஅடி ரூ.200 என்று நி்ர்ணயிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் மற்றும் இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குடியிருப்புகளுக்கு சதுரஅடி ரூ.100-ம், விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இதர மாவட்டங்களில் உள்ள கிராமங்கள், இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு குடியிருப்புகளுக்கு சதுரஅடி ரூ.50, விவசாய நிலங்களுக்கு ஏக்கர் ரூ.2 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகள் இணையதளத்தில் நேரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய குறைந்தபட்ச மதிப்புக்கு கீழ் வேறு மதிப்புகள் ஏதும் உள்ளனவா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.