சின்ன ஓவுலாபுரம் கிராம ஊராட்சியில் ரூ.23 லட்சத்து 83 ஆயிரம் முறைகேடு
சின்னஓவுலாபுரம் கிராம ஊராட்சியில் ரூ.23 லட்சத்து 83 ஆயிரம் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கவுன்சிலர் 5 பேர் தேனி கலெக்டரிடம் புகார்.;
சின்னமனுார் அருகே உள்ள சின்னஓவுலாபுரம் கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் குமார், செல்லம்மாள், மன்மதன், இலக்கியா, ராதா ஆகியோர் கலெக்டர் முரளீதரனை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில், 'சின்னஓவுலாபுரம் கிராம ஊராட்சி துணைத்தலைவர் இறந்து விட்டார். அவருக்கு பதில் வேறு தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. மாறாக தலைவரும், தலைவரின் கணவரும் தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றனர்.
கிராம ஊராட்சி கவுன்சிலர்களை அழைத்து பேசுவதில்லை. எந்த வேலையும் நடக்கவில்லை. இதனை நாங்கள் தட்டி கேட்டதால், எங்களது வார்டுகளில் (1, 3, 5, 8, 9,) தண்ணீர் சப்ளை செய்வதில்லை. சாக்கடைகளை துார்வாறுவதில்லை. தெருவிளக்குகளை எரியவிடுவதில்லை. நுாறு நாள் வேலை திட்டத்தை கூட நிறுத்தி விட்டனர். இதற்கு நாங்கள் தான் காரணம் என மக்களிடம் கூறி மக்களை எங்களுக்கு எதிராக திசை திருப்பி விட்டு, எங்களை மிரட்டுகின்றனர்.
கிராம ஊராட்சியில் 23 லட்சத்து 83 ஆயிரத்து 47 ரூபாய் ஊழல் நடந்துள்ளது. வேலையே செய்யாமல் வேலை செய்ததாக கணக்கு காட்டி உள்ளனர். தலைவர், தலைவரின் கணவர் ஆகியோரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கும், ஊழலுக்கும் கலெக்டர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இல்லையென்றால் எங்களது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.`