நிலவின் வட்டப்பாதைக்குள் இன்று நுழைகிறது சந்திரயான்-3
சந்திராயன்- 3 விண்கலம் இன்று புவியின் வட்டப்பாதையில் இருந்து விலகி இன்று நிலவின் வட்டப்பாதைக்குள் நுழைகிறது.
நிலவை நோக்கி பயணித்து வரும் சந்திரயான்-3 விண்கலம், புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி நள்ளிரவு 12 - 1 மணிக்குள் நிலவின் நீள் வட்டப் பாதைக்குள் விண்கலம் பயணிக்கத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தின் அடுத்த மிக முக்கிய பயணம் ஆகஸ்ட் முதல் தேதியான இன்று நள்ளிரவில் தொடங்குகிறது. புவி வட்டப் பாதையிலிருந்து, நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திரயான் நுழைய 28 முதல் 31 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை இந்த விண்கலம் 51 மணி நேரத்தில் அடையும் என்று கூறப்படுகிறது. நிலவுக்கும் பூமிக்கும் இடையேயான சராசரி தொலைவு என்பது 3.8 லட்சம் கிலோ மீட்டர். ஒவ்வொரு நாளும், நிலவும் பூமியும் இருக்கும் இடங்களைப் பொருத்து இவற்றுக்கு இடையேயான தொலைவு மாறுபடும்.
அந்த வகையில் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு ஐந்தாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் உந்தித் தள்ளப்படும். அதன்பின்னா், திட்டமிட்டபடி ஆக. 23-ஆம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.