தேனி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மத்திய அரசின் தேசிய தரச்சான்று
தேனி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மத்திய அரசின் தேசிய தரச்சான்று வழங்கப்பட உள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி கடந்த 2005ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கல்லுாரியில் தற்போது 218 டாக்டர்கள் பணிபுரி்ந்து வருகின்றனர். 332 நர்சுகள் உள்ளனர். இளங்கலை மருத்துவ மாணவர்கள் 600 பேர் முதுகலை மருத்துவ மாணவர்கள் 40 பேர் படிக்கின்றனர். இவர்களும் டாக்டர்களுக்கு உதவியாக சிகிச்சைக்கு செல்கின்றனர்.
1123 படுக்கைகள் மொத்தம் உள்ளன. தினமும் சராசரியாக 6000ம் வெளிநோயாளிகளும், 600 உள் நோயாளிகளும் புதிதாக வருகின்றனர். தற்போது வரை 22 வகையான மருத்துவ சிறப்பு பிரிவுகள் செயல்படுகின்றன. விரைவில் தலைக்காய சிறப்பு பிரிவும், ஒட்டுறுப்பு அறுவை சிறப்பு பிரிவும் தொடங்கப்பட உள்ளது.
இந்த மருத்துவக் கல்லுாரி தேனி மாவட்டத்திற்கு மட்டுமல்ல. தேனி மாவட்டத்தை ஒட்டி உள்ள கேரளாவை சேர்ந்த இடுக்கி மாவட்ட மக்களுக்கும் பெரும் அளவில் பலனளித்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் இந்த மருத்துவக் கல்லுாரியின் சேவை தமிழக அளவில் பெரும் பாராட்டினை பெற்றுள்ளது. தற்போது இந்த மருத்துவக் கல்லுாரியின் முதல்வராக இருக்கும் மீனாட்சிசுந்தரம், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குனராகவும் உள்ளார். இவர் தேனி, சென்னை ஸ்டான்லி உட்பட ஆறுக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் முதல்வராக பணியாற்றியவர். இவர் தேனி மருத்துவக் கல்லுாரியில் கடந்த பத்து ஆண்டுக்கு முன்பு முதல்வராக இருந்தவர். அப்போது இவர் மேற்கொண்ட 'கோல்டன்டே' திட்டம் தமிழக அளவில் வரவேற்பினை பெற்றது. இந்த திட்டமே இவரை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரிக்கு முதல்வராக மாற்றியது. இப்போது தேனிக்கு முதல்வராக வந்துள்ள மீனாட்சிசுந்தரம் இப்போது தேனி மருத்துவக் கல்லுாரியினை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
முதல் கட்டமாக இந்த மருத்துவமனைக்கு மத்திய அரசின் தேசிய தரச்சான்று பெறும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இந்த தேசிய தரச்சான்று பெறுவதற்காக ஒட்டுமொத்த மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளின் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பார்மசி, கிருமி தடுப்பு, தொற்று நோய் தடுப்பு, உயிரியல் கழிவு மேலாண்மை, மருத்துவக் கழிவு மேலாண்மை, கிருமிநாசினி தெளித்தல், நோயாளிகளை அட்மிஷன் போடுதல், அவர்களின் மருத்துவ பதிவேடுகளை முறையாக பராமரி்த்தல், சிகிச்சை முறைகளையும், நோயாளிகளின் உரிமைகளையும் வெளிப்படையாக தெரிவித்தல், மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி வளாகம் முழுக்க வழிகாட்டி பலகைகள் வைத்தல், வளாகம் முழுவதும் சுத்தமாக பராமரித்தல், புதுப்பித்தல் உட்பட அத்தனை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய தரச்சான்று குழு ஆய்வுக்கு வரும் போது, ஒரு குறைபாடு கூட இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரியின் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தேசிய தரச்சான்றிதழ் பெறுவதில் எந்த தடையும் ஏற்பாடாது என டாக்டர்கள் தெரிவித்தனர்.