அதிகாரத்தின் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்களின் பரிதாப நிலை

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என ஒட்டுமொத்த சமுதாயத்தையும் எதிராகத் திருப்பி விட்டு விட்டனர்

Update: 2022-09-18 09:45 GMT

பைல் படம்

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உளவியல் தொடர்பான பாடங்களைப் (கல்வியியல் பட்டயம் அல்லது கல்வியியல் பட்டம்) படித்துவிட்டு, 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி, மாணவர்களின் உளவியலைப் புரிந்துகொண்ட, அனுபவம் பெற்ற ஆசிரியர்களின் கற்பிக்கும் முறையை, கல்வியியல் பட்டம் படிக்காத ஐஏஎஸ் அதிகாரிகளும், கல்வியியல் பட்டத்தை மட்டும் பெற்று (ஆசிரியப் பணி அனுபவமே இல்லாமல்) நேரடியாக கல்வி அதிகாரிகளாக நியமனம் பெற்றவர்களும், மதிப்பிட்டு வருகின்றனர். இந்த நடைமுறை எந்த வகையில் சரியானது...?

படிக்காத பாமரன் டீக்கடையில் 'வாத்தியார் பாடம் நடத்துவது சரி இல்லை' என பேசுவது போல, இந்த அதிகாரிகள் நேரடியாக ஆசிரியர்களை மதிப்பிடுகிறார்கள். இது போன்று, சுகாதாரத் துறையில் மருத்துவர் பட்டம் பெறாத ஐஏஎஸ் அதிகாரிகள், ஆபரேஷன் தியேட்டரில் அமர்ந்து கொண்டு மருத்துவர் நோயாளிக்கு எவ்வாறு ஆபரேஷன் செய்கிறார் என மதிப்பிடுவாரா...? மருத்துவர்களும் பொதுமக்களும் அதை ஏற்றுக் கொள்வார்களா...?

போக்குவரத்துத்துத் துறையில் ஐஏஎஸ் அதிகாரிகள் தான் மேலாண் இயக்குனர்கள். இவர்கள் பேருந்து ஓட்டுநர் அருகிலோ அல்லது நடத்துநர் அருகிலோ அமர்ந்து கொண்டு, எப்படி பேருந்தை ஓட்டுகிறார் என மதிப்பிடுவாரா...?பொதுப்பணித் துறைப் பொறியாளர் வரைந்து கொடுத்த கட்டட வரைபடத்தை, கட்டுமானத்தை, அத்துறையை நிர்வகிக்கும் ஐஏஎஸ் அதிகாரி மதிப்பிடுவாரா...?

2018 இல் புதிய பாடத்திட்டம் வந்த பிறகு பாட புத்தகங்களின் சுமையை அறிந்து, 2018 இல் இருந்து அரசு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான எந்த ஒரு கூட்டத்தையும் பள்ளிக் கல்வித்துறை நடத்துவதில்லை. ஆனால், திருப்பூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர்கள், தேர்வு முடிவுக் கூட்டத்தை மதியம் 3 மணி வரை உணவு இடைவெளி இல்லாமல் நடத்திக் கொண்டுள்ளனர்.

மாலை 5 மணிக்கு அலைபேசியில் கூப்பிட்டு, அடுத்த நாள் காலை 10 மணிக்கு சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்து விட வேண்டும் (ஆண் ஆசிரியர் பெண் ஆசிரியர், அருகாமை மாவட்டம் தொலைதூர மாவட்டம் என வேறுபாடெல்லாம் கிடையாது) என உத்தரவிடுவதும், எதிர் கேள்வி கேட்பவரை 'சஸ்பெண்ட் செய்யட்டுமா...'என மிரட்டுவதும், 'அரசுப் பள்ளியில் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரி பார்ப்பதும் ஆசிரியர் பணி தான் என, கற்பித்தல் பணி அல்லாதவற்றையும் ஆசிரியர் மீது திணிப்பதெல்லாம் அதிகாரத்தின் உச்சம் அல்லவா என ஆசிரியர்கள் கேட்கின்றனர்...?

போகட்டும்....உங்கள் தலைமுடியை வெட்டிவிடும் முடித் திருத்துபவரிடம், அவரின் தொழிலை மதிப்பிட்டு, புத்திமதிகள் கூறிவிட முடியுமா...? ஆனால், இங்கே அரசுப் பள்ளி ஆசிரியரை மட்டும் பாமரன் முதல் உயர் அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரி, அதற்கும் மேல் உள்ளவர்கள் வரை யாரு வேண்டுமானாலும்,போகிறபோக்கில் மதிப்பிட்டு விட, விமர்சித்து விட, பேசி விட முடியும்.

மாவட்ட கல்வி அலுவலர் நியமனத்தின் போது 75% பதவி உயர்விலும் 25% நேரடியாகவும் நியமனம் செய்யப்படுகிறார்கள். (தகுதி: பட்டம் + பட்ட மேற்படிப்பு மற்றும் கல்வியியல் பட்டம் B.Ed). அரசு பள்ளி மாணவர்களின் நிலை புரியாமல் இந்த 25% மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது.(இவர்கள்தான் பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுகிறார்கள், ஆசிரியராக இருந்து பதவி உயர்வில் செல்வோர் உயர் அதிகாரி ஆகாமலேயே பணி ஓய்வு பெற்று விடுவர்) இதை உணர்ந்து 100% மாவட்ட கல்வி அலுவலர்களையும், பதவி உயர் பதவி உயர்வில் நிரப்ப வேண்டும் என 40 ஆண்டு காலமாக ஆசிரியர் சங்கங்கள் அரசைக் கேட்டு போராடி வருகின்றன. (குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி இருந்தால் மட்டுமே நேரடியாக மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு தேர்வு எழுத முடியும் என விதியை மாற்றினால் நிலைமை ஓரளவு மேம்படும்)

இது போதாதென்று தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளும் களத்தில் இறங்கி வதைக்க தொடங்கியுள்ளனர். (இவர்களின் அதிகாரம், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் வருவாய் துறை அதிகாரிகளிடமும் செல்லுபடியாகுமா என்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும்). கூடவே EMISஐயும் சேர்த்துக் கொண்டுள்ளனர்,

இத்தகைய அதிகப்படியான அதிகாரத் தலையீட்டை எந்த ஆசிரியர் சங்கங்களும் எதிர்க்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை. இத்தனை காலம் இல்லாமல் கல்வித்துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்க வேண்டிய அவசியம் என்ன? கல்வித் துறையில் பணியாற்றி பதவி உயர்வின் மூலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய, பணியாற்றிக் கொண்டுள்ள பலர் பள்ளி கல்வித்துறையை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் மேற்கண்ட ஆட்சியர்கள் தேர்வு முடிவு கூட்டம் நடத்துவதின் உள்நோக்கம் என்ன?

ஏற்கனவே நலத்திட்டங்களும், EMIS வலைதள பிரச்சினைகளும், கற்றல் கற்பித்தல் பணியைப் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்.

இறுதியாக,

1.EMIS வலை தளத்திலிருந்தும் நலத்திட்டங்களிலிருந்தும் ஆசிரியர்களை விடுவியுங்கள்.

2.பாடத்தை மட்டும் நடத்தச் சொல்லுங்கள்.

3.அனுபவம் உள்ள ஆசிரியர்களை கொண்டு வகுப்பறையை மதிப்பிடுங்கள்.

4.உயர் அதிகாரிகளும் IAS அதிகாரிகளும்தான் மதிப்பிட வேண்டுமென்றால், உரிய பட்டப்படிப்பும் பி.எட் பட்டமும் படித்துவிட்டு பத்தாண்டு காலம் ஆசிரியராக பணியாற்றி விட்டு வகுப்பறைக்கு வாருங்கள். இல்லையென்றால், 'ஆசிரியர் பணிக்கு பி.எட் (கல்வியியல்) பட்டமோ, ஆசிரியர் பயற்சிப் பட்டயமோ தேவையில்லை' என உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அறிவித்துவிட்டு, வகுப்பறைக்குள் நுழையுங்கள் என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News