தேனி மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் ரூ. 2,716 கோடி கடன் வழங்கல்

தேனி மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் இதுவரை தொழில் செய்ய ரூ.2,716 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-25 11:19 GMT

தேனி மாவட்ட எஸ்.பி.ஐ., வங்கி கிளைகள் சார்பில் பழனிசெட்டிபட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் முரளீதரன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களை வழங்கினார். அருகில் இடமிருந்து தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, முதன்மை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன், பொதுமேலாளர் கோவிந்த் நாராயண் கோயில் உட்பட பலர் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 20 கிளைகளுடன் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளைகள் மூலம் விவசாயக் கடன், தொழில் கடன், கல்விக்கடன், அரசு மானிய கடன்கள், புது வீடு கட்ட கடன், புது வீடு வாங்க கடன், வீட்டை பராமரிக்க கடன், வீட்டு அடமானக்கடன் உட்பட பல்வேறு வகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதி ஆண்டில் இதுவரை எஸ்.பி.ஐ., வங்கி மூலம் மட்டும் 2716 கோடி ரூபாய் பல்வேறு வகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த கடன் வழங்கும் பணிகளை ஒருங்கிணைக்கவும், விரைவுபடுத்தவும் தேனி மாவட்டத்தில் முதன் முறையாக எஸ்.பி.ஐ., வங்கி சார்பில் பழனிசெட்டிபட்டியில் சில்லரை சொத்து மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையம் என்ற எஸ்.பி.ஐ., வங்கியின் மாவட்ட அளவிலான சில்லரை வர்த்தக கடன் வழங்கும் சிறப்பு பிரிவு அலுவலகம் திறக்கப்பட்டது.

எஸ்.பி.ஐ., வங்கியின் சென்னை வட்டார முதன்மை பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் இம்மையனத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, துணைத்தலைவர் மணிமாறன், எஸ்.பி.ஐ., மதுரை மண்டல பொதுமேலாளர் கோவிந்த் நாராயண் கோயல், மதுரை மண்டல துணை பொதுமேலாளர் ஆனந்த், மண்டல மேலாளர் மோகனபிரபு, உதவி பொதுமேலாளர் தனபால், நிர்வாக முதன்மை மேலாளர் பிரபாகர், கடன் அனுமதி பிரிவின் முதன்மை மேலாளர் கணேஷ்குமார், தேனி எஸ்.பி.ஐ., வங்கியின் முதன்மை மேலாளர் ரெங்கராஜன், பெரியகுளம் எஸ்.பி.ஐ., வங்கியின் முதன்மை மேலாளர் ஜெயசரவணன், மற்றும் கள அலுவலர்கள் ஷர்மிளா, பிரியா, மந்திரி, யோகிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் மகளிர் சுய உதவிக்கடன், விவசாயக்கடன், பால்மாட்டுக்கடன் உட்பட மொத்தம் 9 கோடியே 25 லட்சம் ரூபாய் கடன்களை கலெக்டர் முரளீதரன் வழங்கினார். வங்கி கடன் பெற்றவர்கள் அதன் மூலம் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவும், பிறருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கவும் கலெக்டர் முரளீதரன் அறிவுரை வழங்கி வாழ்த்துக்களை தெரிிவித்தார்.

முன்னதாக தேனி எஸ்.பி.ஐ., வங்கி கிளையின் சார்பில் முதன்மை மேலாளர் ரெங்கராஜன் தலைமையில், எஸ்.பி.,ஐ., யுனோ ஆப் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தேனி எஸ்.பி.ஐ., வங்கி கிளை முன் தொடங்கிய இந்த ஊர்வலத்தை மதுரை மண்டல பொதுமேலாளர் கோவிந்த் நாராயண் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வங்கி நிர்வாகிகள், ஊழியர்கள் , பணியாளர்கள் பங்கேற்ற ஊர்வலம் பெரியகுளம் ரோடு வழியாக சென்று நேரு சிலை சந்திப்பில் திரும்பி மீண்டும் பெரியகுளம் ரோடு வழியாக வந்து வங்கியில் நிறைவடைந்தது. ஊர்வலம் செல்லும் வழியில் இருந்த பொதுமக்களுக்கு யுனோ ஆப் செயல்பாடுகள், பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனை வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீசுகள் பொதுமக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News