வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்! தேனியில் ஸ்டிரைக் பிசுபிசுத்தது!
தேனி மாவட்டத்தில் காலை முதல் வழக்கம் போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.;
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஸ்டிரைக் அறிவித்தன. பொங்கல் விழா கொண்டாட மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தயாராகி வரும் நிலையில், இந்த ஸ்டிரைக் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி தொழிற்சங்கங்களை பஸ்களை இயக்குமாறு கேட்டுக் கொண்டது. இதனால் அந்த தொழிற்சங்கத்தினர் பஸ்களை இயக்க தொடங்கினர். அதேபோல் வேலை கேட்டும், பயிற்சி பெற்றும் பதிவு செய்த டிரைவர், கண்டர்களை வைத்து பஸ்களை இயக்கி வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படுவதால் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை. மக்களும் ஸ்டிரைக் அறிவிப்பினை பொருட்படுத்தாமல், வழக்கம் போல் பஸ்களில் பயணித்து வருகின்றனர். இதனால் தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்டிரைக் பிசுபிசுத்து விட்டது. தவிர ஸ்டிரைக்கினை முறியடித்த அரசின் நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.