பங்களா மேட்டில் சமூக விரோதிகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாப்..??!!

தேனி பங்களாமேட்டில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாப்பினை சமூக விரோதிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

Update: 2023-12-09 05:00 GMT

தேனி பங்களா மேடு பகுதியில் கட்டபட்டுள்ள பயணிகள் நிழற்குடையினை மறித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதுவே சமூக விரோத செயல்களுக்கு வசதியாகி விட்டது.

தேனி பங்களாமேட்டில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பஸ் ஸ்டாப்பினை சமூக விரோதிகள் ஆக்கிரமித்தும், ‛அது அவர்களுக்காக கட்டப்பட்டது’ என்ற மனநிலையுடன் சமூக விரோதிகள் நடந்துகொள்கின்றனர்.  அதிகாரிகள் இதை  கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

தேனி பங்களாமேட்டில் மதுரை ரோட்டோரம் பல லட்சம் செலவில் புதிய பஸ்ஸ்டாப் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் ஸ்டாப் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், மக்கள் அமர முடியவில்லை. காரணம் பஸ்ஸ்டாப் சிலாப் முழுவதையும் சமூக விரோதிகள் ஆக்கிரமித்து விட்டனர்.

பஸ்ஸ்டாப் முன்பாக கனரக வாகனங்களை நிறுத்திக் கொள்கின்றனர். மக்கள் பயன்படுத்த முடியவில்லை. மாறாக சமூக விரோதிகள் உள்ளே அமர்ந்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது, சீட்டாடுவது போன்ற பல பணிகளில் ஈடுபடுகின்றனர். இரவில் சங்கடமான விஷயங்களும் கூட நடக்கின்றன. 

இத்தனை லட்சம் செலவு செய்தும் பலன் இல்லையே என நெடுஞ்சாலைத்துறையினரோ, நகராட்சி நிர்வாகமோ, போக்குவரத்து நிர்வாகமோ, போலீஸ் நிர்வாகமோ கவலைப்படவில்லை. இது எப்படி போனால் எங்களுக்கென்ன என்ற மனநிலையில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் வழக்கம் போல் வெயிலிலும், மழையிலும் காய்ந்தும், நனைந்தும் பஸ் ஏறி, இறங்குகின்றனர். சமூக விரோதிகள் பாதுகாப்பான வலு,வலு தரையில் உல்லாச வாழ்க்கை வாழ்கின்றனர். 

மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த விஷயத்தில் நேரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த அவலநிலை எல்லாம் மாறும். 

Tags:    

Similar News