பஸ் கண்டக்டர்கள் எச்சில் தொட்டு தரும் டிக்கெட்: பொதுமக்கள் அவதி
அரசு மற்றும் தனியார் பஸ்களில் பல கண்டக்டர்கள் எச்சிலை தொட்டு டிக்கெட் கிழித்து தருவதால் சங்கடத்தில் பொதுமக்கள்;
மனிதனின் எச்சில் மூலமே கொரோனா வேகமாக பரவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். தவிர எச்சில் என்பது இன்சுலின் சம்பந்தப்பட்ட சிறந்த ஒரு விஷயமாக இருந்தாலும், ஒருவரின் எச்சில் அடுத்தவரை பெரும் அருவருப்பிற்கு உள்ளாக்கும் என்பதும் அத்தனை பேருக்கும் தெரியும். இதனால் தெருவிலும், பொது இடங்களிலும் எச்சில் துப்பாதீர்கள். முககவசம் அணியுங்கள் என அரசே பிரசாரம் செய்கிறது.
இந்த அசாதாரணமான எச்சிலை அதிகம் பயன்படுத்துவது கண்டக்டர்கள் தான். அரசு பஸ், தனியார் பஸ் என இதில் எந்த பாகுபாடும் இல்லை. ஒரு சில அரசு பஸ்களில் டிக்கெட் பேக் அருகே ஸ்பான்ச் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்து அதனை தொட்டு டிக்கெட் கிழிக்கின்றனர். பணம் எண்ணித்தருகின்றனர். இது மிகவும் நாகரீகமான நடைமுறை ஆகும். ஆனால் சிலர் இன்னும் எச்சிலை தொட்டே டிக்கெட் கிழிக்கின்றனர். சில்லரை ரூபாய்களை எண்ணித்தருகின்றனர். இதனை பார்க்கும் பொதுமக்கள் அவர்கள் தரும் டிக்கெட்டையும், பணத்தையும் வாங்க மிகவும் சங்கடப்படுகின்றனர். அதுவும் பெண்கள் மிகவும் அறுவெறுப்படைகின்றனர். இதனை புரிந்து கொள்வதும் இல்லை. இது போன்ற சூழ்நிலைகளை மாற்ற, டிக்கெட் கண்டக்டர்கள் எச்சிலை தொடக்கூடாது என போக்குவரத்துத்துறை உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.