தேனியில் படகு போக்குவரத்து: கலக்கும் பா.ஜ., பெண் வேட்பாளர்
தேனி நகராட்சி 15வது வார்டில் முடங்கி கிடக்கும் மீறுசமுத்திரம் கண்மாய் படகு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவேன் என பா.ஜ., வேட்பாளர் புவனேஷ்வரி உறுதி அளித்துள்ளார்.
தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 15வது வார்டில் பா.ஜ., சார்பில் பெண் வேட்பாளராக புவனேஷ்வரி களமிறங்கியுள்ளார்.
இவர் தனது தேர்தல் வாக்குறுதியில், தேனியில் 15வது வார்டு பகுதியில் மீறுசமுத்திரம் கண்மாய் அமைந்துள்ளது. வீரப்ப அய்யனார் மலையில் பெய்யும் மழைநீர் இந்த கண்மாய்க்கு வருகிறது. தற்போது இந்த கண்மாய் நீர் மூலம் நேரடி பாசனம் எதுவும் இல்லை. நிலத்தடி நீர் பயன்பாடும், சுற்றுச்சூழல் பயன்பாட்டிற்கும் இந்த கண்மாய் மிகவும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கலெக்டர் பஷீர்அகமது இருந்தபோது, இந்த கண்மாயினை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, சுற்றிலும் பூங்கா, மின்விளக்குகள், நடைமேடை அமைத்து கண்மாயில் படகு போக்குவரத்து விட திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்த திட்டத்தை நகராட்சி மூலம் செயல்படுத்த பொதுப்பணித்துறையும் தடையில்லா சான்று வழங்கியது.
அதன்பின் பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் முடங்கிப்போனது. நான் வெற்றி பெற்றால் எனது வார்டில் உள்ள இந்த மீறுசமுத்திரம் கண்மாயில் இந்த திட்டத்தை செயல்படுத்தி படகு போக்குவரத்து விடுவேன். இதற்கான அத்தனை வாய்ப்புகளும் நம்மிடம் குவிந்து கிடக்கின்றன. நாம் தான் இதுவரை பயன்படுத்தவில்லை. 15வது வார்டில் உள்ள கோட்டைக்களம், மிரண்டா லைன், நேருஜிநகர் பகுதிகளில் தரமான ரோடு அமைப்பேன். ரோட்டின் இருபக்கமும் மரங்கள் நடுவேன். பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு, தெருவிளக்கு வசதிகளை முறையாக செய்து கொடுப்பேன்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் எனது வார்டு மக்களுக்கு முழு அளவில் கிடைக்க மாதந்தோறும் முகாம் நடத்தி, பயனாளிகளை தேர்வு செய்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு தகுதியான திட்டங்களின் கீழ் உதவிகள் பெற்றுத்தருவேன்.
எனது வார்டில் மற்றொரு முக்கிய பிரச்சனை பல இடங்களில் ரோடு மேடாகி, வீடுகள் பள்ளத்தில் சிக்கி விட்டது. இந்த இடங்களில் ரோட்டினை தோண்டி, வீட்டு வாசல்படிக்கு கீழே ரோடு தளத்தை மாற்றி அமைத்து தருவேன். வார்டு முழுக்க நவீன கண்காணிப்பு கேமரா பொறுத்தி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து, பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்துவேன்.
அனைத்து பொதுமக்களும் பயனடையும் வகையில் ஜிம், உடற்பயிற்சி கூடம், யோகா சென்டர் அமைப்பேன். இதற்கான இட வசதியும், வாய்ப்புகளும் உள்ளன. இளைஞர்களின் கல்வித்தகுதி, திறனுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருவேன்.
கல்விக்கடன், முத்ராகடன், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், இலவச தையல் பயிற்சி, இலவச கம்ப்யூட்டர் பயிற்சிகள் மாவட்ட தொழில்மையம் மூலம் பெற்றுத்தருவேன். எனது வார்டில் இரண்டு இடங்களில் சிறுவர் பூங்கா அமைத்து தருவேன். லஞ்சம், வளர்ச்சிப்பணிகளில் கமிஷன் பெறுவது, இலவச சேவைகளுக்கு பணம் வாங்குவது போன்ற தவறான நடவடிக்கைகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.