ஓணம் கோலத்தை அழித்த பெண் மீது போலீஸ் வழக்கு

ஓணம் கோலத்தை அழித்த அகங்காரம் பிடித்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update: 2024-09-24 16:31 GMT

ஓணம் கோலத்தை அழித்த பெண்.

பெங்களூரு சம்பீஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தானிசன்ட்ரா ஹெக்டே நகரில் மோனார்க் செரினிட்டி அபார்ட்மென்ட் உள்ளது. இங்கு வசிக்கும் குடும்பத்தினர் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அப்போது அபார்ட்மென்டின் பொது உபயோக பயன்பாட்டு இடத்தில் அழகிய பூக்கோலம் இட்டிருந்தனர். இதற்கு, அதே அபார்ட்மென்டில் வசிக்கும் சிமி நாயர் என்ற மலையாளி பெண் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

‘கோலம் போடுவோர், அவரவர் வீட்டில் போட்டுக்கொள்ள வேண்டியது தானே; பொது இடத்தில் ஏன் போட வேண்டும்' என்பது அவரது வாதம். ஓணம் விழா கொண்டாடிய சக அபார்ட்மென்ட்வாசிகளிடம் வாக்குவாதம் செய்த அவர், பூக்கோலத்தை காலால் மிதித்து அழித்தார். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மாறி மாறி வாக்குவாதம் செய்தபடி கோலத்தை அழிக்கும் செய்கையை அங்கிருந்த சிலர், வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பினர்.

வீடியாவை பார்த்த பலர், 'ஒரு பெண் இப்படியும் செய்வாரா, அவரும் மலையாளி தானே, ஏன் இத்தனை ஆவேசம், படித்தால் மட்டும் போதுமா, அடிப்படை நாகரிகம் கூட இல்லையா' என்று கமென்ட் செய்து வருகின்றனர். கோலத்தை அழிக்க வேண்டாம் என்று அங்கிருந்தவர்கள் மன்றாடி கேட்டும், அதை பொருட்படுத்தாமல் அவர் அழிக்கும் காட்சி வீடியோவில் இருந்தது.

அபார்ட்மென்டில் வசிக்கும் குழந்தைகள் பலர், இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை 4 மணிக்கு கோலத்தை தயார் செய்துள்ளனர். இவ்வளவு முயற்சி செய்து உருவாக்கிய பூக்கோலத்தை அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் அழித்து அலங்கோலம் செய்து விட்டார். இது பற்றி மலையாளி சங்கத்தினர் சார்பில் போலீசில் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பெண் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

Tags:    

Similar News