போலி துப்பாக்கி பயன்படுத்தினால் சிறைதான் : காவல்துறை எச்சரிக்கை ..!

Theni District News -தேனி மாவட்டத்தில் போலீசிடம் சிக்கிய பலர், ‛பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கவும், திருடவும்’ போலி துப்பாக்கிகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

Update: 2023-12-08 05:37 GMT

துப்பாக்கிகள் (கோப்பு படம்)

Theni District News -தேனி மாவட்டத்தில், போலி  துப்பாக்கிகளை பயன்படுத்தி மிரட்டியதாகவோ, தடை செய்யப்பட்ட ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்ததாகவோ வழக்கு பதிவு செய்து கைது செய்வோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்..

சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் போடியில் போலீசாரிடம் இருந்து தப்பிய கொள்ளைக்கும்பல் 10க்கும் மேற்பட்ட போலி துப்பாக்கிகளை வைத்திருந்தனர். அதேபோல் கம்பத்தில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரி ஒருவர் போலி துப்பாக்கி வைத்திருந்தார். வருஷநாட்டில் சிக்கியது மட்டுமே ஒரிஜனல் துப்பாக்கி. ஆனால் அது மிகவும் பழைய ரகத்தை சேர்ந்தது. இந்த துப்பாக்கி மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்பட்டுள்ளது. தவிர வேறு சில இடங்களிலும் போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து போலி துப்பாக்கிகளை கைப்பற்றி உள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: தேனி மாவட்டத்தை சேர்ந்த கொள்ளையர்கள் பெரும்பாலும் சொந்த மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதில்லை. வெளியூர்களில் திருடி விட்டு சொந்த மாவட்டத்தில் வந்து பதுங்கிக் கொள்கின்றனர். இவர்களிடம் சிக்கிய துப்பாக்கிகள், ‛ஸ்போர்ட்ஸ் ஸ்டோர்களில்(விளையாட்டு உபகரணங்களை விற்கும் கடைகள்) விற்கப்படுகிறது.

இங்கு விற்கப்படும் விலை உயர்ந்த துப்பாக்கிகளை வாங்கி பயன்படுத்தி உள்ளனர். இதன் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. இந்த துப்பாக்கிகள் ஒரிஜினல் துப்பாக்கி போல் இருக்கும். சுடும், துப்பாக்கியில்் இருந்து சத்தமும் வரும், குண்டுகளும் வெளியேறும். ஆனால் இந்த துப்பாக்கிகளை வைத்து குருவியை கூட முடியாது.

கஞ்சா கடத்தி வரும் போது ஏதாவது சிக்கலில் சிக்கிக் கொண்டால் மிரட்டி தப்பிக்கவும், திருட்டு சம்பவங்களில்் ஈடுபடும் போதும் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டால் அவர்களை மிரட்டி தப்பிக்கவும் இந்த நபர்கள் இது போன்ற துப்பாக்கிகளை பயன்படுத்தி உள்ளனர்.

அனுமதியின்றி மதுவிற்கும் சிலர் கூட இந்த பொம்மை துப்பாக்கிகளை எந்த நேரமும் கை வசம் வைத்துள்ளனர். இதனால் இவர்களை கைது செய்யும் போது, கஞ்சா கடத்தல்,, திருட்டு வழக்குகள் மட்டுமே பதிவு செய்ய முடிகிறது. இனிமேல் கொடும் ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான அல்லது அனுமதியின்றி ஆபத்தான ஆயுதங்களை வைத்திருக்கும் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம்’ என போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News