தேனியிலிருந்து மும்பை, கொல்கத்தாவுக்கு தினமும் 100 டன் இளநீர்
தேனி மாவட்டத்தில் இருந்து மும்பை, கொல்கத்தாவிற்கு தினமும் சராசரியாக 100 டன் இளநீர் கொண்டு செல்லப்படுகிறது.;
தேனி மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தவிர பல ஆயிரம் செவ்விளநீர் மரங்களும் உள்ளன. தற்போது தேங்காய் விலை குறைவு. எனவே புதிதாக தென்னை மரங்களை சாகுபடி செய்பவர்கள் இளநீருக்கு உதவும் மரங்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர்.
செவ்விளநீர், பச்சை இளநீர் இரண்டுக்குமே மும்பை, கொல்கத்தா, புதுடில்லி, அகலகாபாத் உள்ளிட்ட வடமாநில நகரங்களில் பெரும் வரவேற்பு உள்ளது. குறைந்தபட்சம் சீசன் நேரங்களில் குறைந்தது 10 லாரிகள் அதாவது ஒரு லாரிக்கு 10 டன் வீதம், 100 டன் இளநீர் தேனி மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. சில லாரிகளில் 15 டன் இளநீரும் கொண்டு செல்லப்படுகிறது. சாதாரண நேரங்களில் கூட குறைந்தபட்சம் தினமும் 60 டன் இளநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இவர்கள் விவசாயிகளுக்கு தோட்டத்தில் நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். குறைந்தபட்சம் 25 ரூபாய் வரை ஒரு இளநீருக்கு விவசாயிகளுக்கு விலை கொடுப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது தவிர தேனியில் இருந்து தினமும் பல டன் கருவேப்பிலை, காய்கறிகளும் கொண்டு செல்லப்படுகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.
இளநீரின் மருத்துவ குணங்கள்... இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.
இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.
இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன.