அதிக வருவாய் பெறும் கிராமத்து ஆட்டோ டிரைவர்கள்
தேனி மாவட்டத்தில் கிராமத்து ஆட்டோ டிரைவர்கள் தான் அதிகளவு தினசரி வருவாய் பெறுகின்றனர்.
பொதுவாகவே நகர் பகுதிகளில் மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும். எனவே நகர் பகுதிகளில் போக்குவரத்துக்கு வசதியாக பல ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அத்தனை ஆட்டோக்களிலும் மக்கள் பயணிக்கத்தான் செய்கின்றன. இப்படி இயக்கப்படும் ஆட்டோக்களில் சிங்கில் சவாரியை விட ஷேர் ஆட்டோ சவாரிகள் தான் அதிகம் நடக்கின்றன. இதனால் நகர் பகுதி ஆட்டோ டிரைவர்கள் தான் அதிகம் சம்பாதிக்கின்றனர் என பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல. நகர் பகுதிகளில் ஆட்டோக்களின் அதிக எண்ணிக்கை காரணமாக வருவாய் பலருக்கும் பிரிந்து விடுகிறது. கிராமத்தில் குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் மட்டுமே ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் நகர் பகுதிகள் அளவுக்கு இல்லை. இதனால் அவசரத்திற்கு கிராம மக்கள் ஆட்டோக்களை தவிர வேறு எதையும் பயன்படுத்த வாய்ப்புகள் குறைவு.
எனவே கிராமத்து ஆட்டோக்களுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு சவாரி உறுதியாகி விடுகிறது. ஆனால் நகர் பகுதி ஆட்டோக்களுக்கு இந்த வாய்ப்புகள் எதுவும் இல்லை. தவிர கிராமத்து ஆட்டோக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் விவசாய பணிகள்.
விவசாய பணிகள் தீவிரமாக நடக்கும் கிராமங்களில் அறுவடையான காய்கறிகள், பயிர்கள், தானியங்களை ஆட்டோக்களில் ஏற்றியே விவசாயிகள் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்கின்றனர். முன்பு போல் மாட்டு வண்டிகள் எந்த கிராமத்திலும் இல்லை. டிராக்டர்களை பயன்படுத்தும் அளவுக்கு தினசரி அறுவடை நடப்பதும் இல்லை. சிறிய ரக சரக்கு வாகனங்கள் கூட அதிக கட்டணம் கேட்கின்றனர்.
ஆனால் ஆட்டோ டிரைவர்கள் சவாரி பணத்தை விட சிறிதளவு மட்டுமே அதிகம் கேட்கின்றனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர் தெரிந்தவராக இருந்தால் நாம் செல்ல முடியாவிட்டால் கூட பொருளை நம்பி அனுப்பலாம். எனவே விவசாயிகளின் முதல் தேர்வு ஆட்டோவாகவே உள்ளது.
இந்த புதிய வாய்ப்புகளை கிராமத்து ஆட்டோ டிரைவர்கள் மிகவும் நட்புடனும், அனுசரிப்புடனும், மனித நேயத்துடனும் பயன்படுத்தி தினமும் குறிப்பிட்ட அளவு வருவாய் ஈட்டுகின்றனர். இதனால் ஆட்டோ டிரைவர்களுக்கும் தொடர்ந்து சவாரி கிடக்கிறது, மக்களுக்கும் பொருட்களை கொண்டு செல்லும் செலவு குறைகிறது.