தேனி நகரின் மையப்பகுதியில் மக்களை கவர்ந்த பறவைகள் சரணாலயம்
தேனி நகரின் மையத்தில் வால்கரடு குன்று தொடரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள வனத்துறை அலுவலகம் பறவைகள் சரணாலயம் போல் உள்ளது.;
தேனி நகரின் மையத்தில் வால்கரடு குன்று தொடரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள வனத்துறை அலுவலகம் பறவைகள் சரணாலயம் போல் உள்ளது.
மாவட்ட வனஅலுவர் குடியிருப்பும், வனச்சரகர் குடியிருப்புகளும், வன ஊழியர்கள் குடியிருப்புகளும் இங்கு தான் உள்ளன. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாத்தில் மிகவும் உயரமாக வளர்ந்த பல வகை மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
நகரின் மையத்தில் இருந்தாலும், இந்த பகுதி மிகவும் அமைதியான குடியிருப்பு பகுதிகள் நிறைந்த பகுதி ஆகும். இங்குள்ள ரோடுகளில் பெரும்பாலும் டூ வீலர்கள், ஆட்டோக்கள் தான் அதிகம் சென்று வரும், கார்கள், பஸ்கள், கனரக வாகனங்கள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே வந்து செல்லும். எனவே இப்பகுதியில் பகலில் கூட அமைதி நிலவும். இங்குள்ள வனஅலுவலகம் வால்கரடு மலைக்குன்றின் அடிவாரத்தில் உள்ளதால் அதிக எண்ணிக்கையில் பாம்புகள் வாழ்கின்றன. மரங்களில் பறவைகள் வாழ்கின்றன. அதிகாலையில் 6 மணிக்குள் அனைத்து பறவைகளும் இறைதேட புறப்பட்டு சென்று விடும். மாலை ஆறு மணிக்கு திரும்பி விடும்.
மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் பறவைகள் அதிகளவில் காணப்படும். பறவைகளின் சத்தத்தை அதிகளவில் கேட்க முடியும். இங்கு தங்கும் பறவைகள் குடிநீர் அருந்த இந்த வளாத்திற்குள் தனியாக நீண்ட துாரத்திற்கு தனி குடிநீர் கால்வாய்களை வனத்துறை அமைத்துள்ளது. அதேபோல் பவைகள் சாப்பிட தினமும் உணவுகளை அள்ளிப்போடுகின்றனர். இதற்கெனவே தனியாக ஊழியர்களை நியமிக்கின்றனர்.
இங்குள்ள வனத்துறை அலுவலகங்களை தவிர மற்ற பகுதிக்குள் பார்வையாளர்களையோ, குழந்தைகளையோ ஊழியர்கள் அனுமதிப்பதில்லை. காரணம் பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் பறவைகளை பார்க்க, போட்டோ எடுக்க விரும்புபவர்களை வனத்துறை ஊழியர்களே பக்குமாக அழைத்துச் செல்கின்றனர். நீண்ட நேரம் யாரையும் அனுமதிப்பதில்லை. சிறிது நேரத்திலேயே மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விடுகின்றனர்.
பல நேரங்களில் வனத்துறை அலுவலகத்திற்குள்ளும், மாவட்ட வன அலுவலர் வீட்டிற்குள்ளும் பாம்புகள் புகுந்து விடும். ஆனாலும் பாம்புகளை இவர்கள் அடிப்பதில்லை. மாறாக அதனை பக்குவமாக வெளியேற்றி விடுகின்றனர். பாம்புகளுடன் வாழ்வது எங்களுக்கு பழகிப்போன விஷயம் என கூறிச்சிரிக்கன்றனர் இங்குள்ள வன ஊழியர்கள். மாணவ, மாணவிகள் பறவைகளை காண விரும்பினால் காலை ஐந்து மணிக்கு வர வேண்டும். ஆறுமணிக்குள் அனைத்து பறவைகளும் வெளியேறி விடும் என இவர்கள் தெரிவித்தனர்.