தேனி லோக்சபா தொகுதி வேட்பாளர்களின் கவனத்திற்கு!
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் தேனி தொகுதி முக்கிய பிரச்னைகளை பட்டியலிட்டுள்ளார்.
தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் தொகுதியின் முக்கிய பிரச்னைகளை பற்றி பேசவில்லை. இதனால் நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம் என கூறியுள்ள சஅன்வர் பாலசிங்கம் தொடர்ந்து கூறியதாவது:
தேர்தல் களத்தில் பம்பரமாக நீங்கள் சுற்றி வரும் நேரத்தில், காலங்காலமாக இந்த தேனி மண்ணில் நிலவி வரும் பிரச்சனைகளை உங்கள் முன் வைக்கிறேன்.
உங்கள் வேலையோடு வேலையாக, இதையும் உங்கள் மனதில் நிறுத்தி வேலை செய்யுங்கள் என்று தாழ்மையுடன் வேண்டுகோள் வைக்கிறேன். உங்களை நேரில் சந்தித்து இது தொடர்பான மனுவையும் இரண்டொரு நாட்களில் அளிப்போம்.
பிரச்சனைகளைப் பட்டியலிடுகிறேன். குறித்துக் கொள்ளுங்கள். தீர்ப்பதற்கு முயற்சி எடுங்கள், நீங்கள் வெற்றி பெற்றாலும்,வெற்றி வாய்ப்பை இழந்தாலும்...
1-முல்லைப் பெரியாறு அணை குறித்து நீங்கள் மூவருமே இந்த தேர்தலில் இதுவரை எந்த வாக்குறுதியையும் எங்களுக்கு கொடுக்கவில்லை. 152 அடி நீர்மட்டம் என்பது கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு. அதை அமல்படுத்துவதற்கு நீங்கள் குரல் கொடுக்க எங்களுக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும்.
2-போடி முதல் லோயர் கேம்ப் வரையிலான ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர், உடுமஞ்சோலை, தேவிகுளம், பீருமேடு தாலுகாக்களில் அனுதினமும் சென்று வரும் நிலையில், பயண தூரத்தை குறைக்கும் வகையில், தேவாரம் அடிவாரத்தில் உள்ள மீனாட்சிபுரத்திலிருந்து சாக்கலூத்து மெட்டு வரையிலான மலைச்சாலையை போடுவதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் போராடி, வாதாடி அந்தப் பாதையை பெற்று தருவதற்கு நீங்கள் உறுதியளிக்க வேண்டும்.
3-குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன் வரையிலான மலைச்சாலைக்கு அளவீடு செய்யப்பட்டு, எல்லை கற்கள் ஊன்றுவதற்கு தயாரான நிலையில், அந்தப் பாதை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. தேவிகுளம் தாலுகாவில் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கானோர் அந்த பாதையை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களும் பயனுறுவதோடு,டன் கணக்கிலான கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகள் மிக குறைந்த விலையில் போடியை வந்து சேர்வதற்கு எளிதான ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதையும் ஆவண செய்யுங்கள்.
4-நீண்ட காலமாக ஐந்து மாவட்ட மக்களின் கோரிக்கையாக இருக்கும் வைகை அணையை தூர் வாருவது தொடர்பாக நீங்கள் எங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
5-மூல வைகை ஆற்றின் தோற்றுவாயான வெள்ளிமலை வனச்சரகத்திற்குள் விவசாயிகள் என்கிற பெயரில், ஆக்கிரமிப்பு செய்திருக்கும் ஆக்கிரமிப்பாளர்களை, போர்க்கால அடிப்படையில் வெளியேற்றுவதற்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவை செயல்படுத்தினால் மூல வைகை ஆற்றில் ஆண்டுதோறும் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அது குறித்தான உங்களுடைய பதிலையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
6-மூல வைகை ஓடிவரும் வாலிப்பாறை முதல் கண்டமனூர் வரை ஆற்றின் குறுக்கே ஒரு டி.எம்.சி கொள்ளளவு கொண்ட,எட்டு தடுப்பணைகளை கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஆவன செய்ய வேண்டும்.
7-கம்பம் பள்ளத்தாக்கில் அபரிமிதமாக உற்பத்தி செய்யப்படும் கருப்பு திராட்சைக்கென நிரந்தர ஏற்றுமதி மையம் ஒன்றையும், குளிரூட்டப்பட்ட மையம் ஒன்றையும், அரசே கொள்முதல் செய்வதற்கான ஏற்பாட்டை செய்வதற்கும் நீங்கள் அனைவரும் முன்வர வேண்டும்.
8-பெரியாறு அணையினை பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, தேனி மாவட்ட ஆட்சியரின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முன் முயற்சியை நீங்கள் அனைவரும் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
9-பதினெட்டாம் கால்வாய்க்கு ஏற்கனவே சூட்டப்பட்ட பி டி ஆர் பழனிவேல் ராஜன் பெயரை மாற்றி,(ஏற்கெனவே அவரது தந்தை பி.டி.ராஜன் பெயரில் ஒரு கால்வாய் இருப்பதால்) மாமனிதர் கர்னல் ஜான் பென்னிகுயிக் பெயரை சூட்டுவதற்கு அரசை நீங்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும்.
10-நீண்ட காலமாக அளக்கப்படாமல் கிடக்கும் தமிழக கேரள எல்லையை அளப்பதற்கு நாடாளுமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வருவதற்கு நாங்கள் உங்களுக்கு ஆவணங்களை தருகிறோம். நீங்கள் எங்களுக்கு உதவி செய்யுங்கள்.
11-கற்புக்கரசி கண்ணகி கோவில் தனி நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, முழுமையாக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு, அந்த கற்புக்கரசி உங்களுக்கு வழி காட்டுவாள் என்று நம்புகிறோம்.
12-வறண்டு போய் கிடக்கும் ஆண்டிபட்டி தாலுகா தரிசு நிலங்களை மேம்படுத்த, குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு சென்று, கண்மாய்களை நிரப்பும் நீண்ட கால திட்டத்திற்கு உயிர் கொடுக்க நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
14-முல்லைப் பெரியாறின் இரு கரைகளிலும் செய்யப்பட்டு இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, மாநில அரசிற்கு அழுத்தம் கொடுத்து, வெற்றி பெறுபவர் எவரோ, அவரே முன்னின்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன் வர வேண்டும்.
15-கம்பம் அருகே இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வுகளை முற்றாக நிறுத்த நாடாளுமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வருவதற்கு வெற்றி பெறுபவர் முன்வர வேண்டும்.
16-முல்லைப் பெரியாறு அணை காக்க உயிர் நீத்த போராளிகளான தேனி ஜெயபிரகாஷ் நாராயணன், சின்னமனூர் ராமமூர்த்தி மற்றும் சீலையம்பட்டி சேகர் ஆகிய மூவருக்கும் லோயர் கேம்பில் உள்ள மாமனிதர் கர்னல் பென்னிகுயிக்கின் மணிமண்டபத்தில், முழு உருவ சிலை அமைப்பதற்கு நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
17-கட்டுக்கடங்காமல் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை முற்றாக நிறுத்துவதற்கு களத்தில் நிற்கும் நீங்கள் அனைவரும் ஒன்றாக நின்று முடிவு கட்ட வேண்டும் என்று விரும்புகிறோம்.
18-ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்திற்குள் உள்ளடங்கிய அத்தனை சொகுசு விடுதிகளும் அப்புறப்படுத்தப்பட்டு, அந்தப் பல்லுயிர் பெருக்க மண்டலம் எல்லா உயிர்களுக்குமான வனமாக இருக்க வேண்டும் என்பதில் உங்கள் யாருக்கும் இரு வேறுபட்ட கருத்துக்கள் இருக்காது என்று நம்புகிறோம்.
19-முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதியான ஆனவச்சால் பகுதியில் கேரள மாநில அரசு அத்துமீறி கட்டி வரும் கார் பார்க்கிங் தொடர்பாக மத்திய வனத்துறை அமைச்சகத்தை அணுகி நல்ல முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்
20-திண்டுக்கல் கோட்டயம் அகல ரயில் பாதை திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உங்களுடைய கடுமையான ஒத்துழைப்பை நாடி நிற்கிறோம்
21-கொச்சி முதல் தனுஷ்கோடி வரை நீண்டு கிடக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 49 க்கு, மாமனிதர் கர்னல் பென்னிகுயிக் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும்.
22-சின்னமனூரை மையப்படுத்தி வாழை கரும்பு பயிர்களுக்கான ஏற்றுமதி மண்டலம் அமைப்பதற்கு உங்களுடைய உதவி கண்டிப்பாக தேவை. செய்வீர்கள் என்கிற நம்பிக்கையுடன், ச.அன்வர் பாலசிங்கம்
ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.