கம்பம் திமுக எம்எல்ஏ அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி
கம்பம் தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தி.மு.க., நபரை போலீசார் காப்பாற்றினர்.;
மாநிலம் முழுவதும் தி.மு.க., உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. தேனி தெற்கு மாவட்டத்தில் உள்கட்சி தேர்தலில் கடும் பிரச்னை உருவாகி உள்ளது. உத்தமபாளையத்திலும், கம்பத்திலும் பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்று உத்தமபாளையத்தில் கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை முற்றியது.
இந்நிலையில் கம்பம் முன்னாள் 9 வது வார்டு தி.மு.க., செயலாளரான ஜாஜகான் என்பவர் இன்று கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், (தெற்கு மாவட்ட செயலாளரும் அவர் தான்). அலுவலகம் முன்பு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு வந்த போலீசார், ஜாஜகான் உடலில் தண்ணீரை ஊற்றி தீ பற்ற வைக்கும் முன்னர் அவரை தடுத்து காப்பாற்றினர். தான் நீண்ட நாள் கட்சியில் பணிபுரிந்தும், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் நிர்வாகிகள் தேர்வில் பாரபட்சம் காட்டி வருவதாகவும், இதனால் தனக்கு பதவி கிடைக்கவில்லை எனவும் புகார் எழுப்பினார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு பிரிவு மக்கள் ராமகிருஷ்ணனின் பாரபட்சத்தை கண்டித்து ரோடு மறியல் செய்தனர். இப்படி பிரச்னை, மேல் பிரச்னை வருவதால் தி.மு.க., மேலிடம் தேனி தெற்கு மாவட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது. விரைவில் கட்சி மேலிடம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என அக்கட்சியினர் தெரிவித்தனர்.