எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்கு இளைஞர் கழகத்தின் அதியமான் விருது
வடசென்னைத் தமிழ் இளைஞர் கழகம் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்கு அதியமான் விருது வழங்கிச் சிறப்பித்தது.
வடசென்னைத் தமிழ் இளைஞர் கழகத்தின் 82 ஆம் ஆண்டு விழா, சங்கத்தின் நிறுவுநர் தி. வே. சுந்தரமூர்த்தியின் 102-வது பிறந்த நாள் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா சங்கத்தின் ஆலோசகர் தி.வே.சு. திருவள்ளுவர் தலைமையில், சாக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் இளையபெருமாள் மற்றும் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க வடசென்னைத் தலைவர் எட்வர்டு ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் மகேந்திரவர்மன் வரவேற்புரை வழங்கினார்.
சென்னை, செயிண்ட் மேரிஸ் பள்ளிக் குழுமத்தின் தலைவர் வழக்கறிஞர் எம்.ஜே. மார்ட்டின் கென்னடி, எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி மற்றும் பெரும்புலவர் கோ. இராமதாஸ் ஆகியோருக்கு அதியமான் விருதையும், தமிழாசிரியை ஜெகதீஸ்வரி மற்றும் யோகக்கலை ஆசிரியை கா. விஜயராணி ஆகியோருக்கு ஔவையார் விருதையும் வழங்கிச் சிறப்பித்தார். இவ்விழாவில் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் முன்னாள் தலைவர் இரா. பன்னீர்செல்வம், கவியரசு கண்ணதாசன் பேரவைத் தலைவர் க. இராமலிங்க ஜோதி, பொறியாளர் தி.வே.சு. கபிலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வினைச் சங்கத்தின் துணைத்தலைவர் த. சுப்பிரமணி தொகுத்து வழங்கினார். முடிவில் சங்கத்தின் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் கற்பகம் சுரேந்திரநாத் நன்றியுரை வழங்கினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் சங்கத்தின் தலைவர் மோதிலால் பாபு செய்திருந்தார்.