முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழு ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக்கண்காணிப்புக்குழு ஆய்வு நடத்தியது.

Update: 2022-07-19 10:13 GMT

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக்கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையில் பருவமழை காலங்களில் அணையின் உறுதித்தன்மை, நீர் வரத்து, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருகிறது.

மத்திய கண்காணிப்புக்குழுவிற்கு உதவியாக மத்திய கண்காணிப்பு துணைக் குழுவும் ஆய்வு செய்து மாதாந்திர பராமரிப்பு, அணையின் மேற்பார்வை அணைக்கு வரும் நீர் வரத்து மதகுப்பகுதி மற்றும் நீர் கசிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அதன் அறிக்கையை கண்காணிப்பு குழுவிற்கு சமர்ப்பித்து வருவது வழக்கம். அதன்பேரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய துணைக்குழுவினர் அணையில் ஆய்வு நடத்தினர்.

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் 135.90 அடியாக உள்ளது. இந்நிலையில் அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் ஆய்வு நடத்தினர். மத்திய நீர் வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில், தமிழக தரப்பு பிரதிநிதிகளாக அணையின் செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் எம்.குமார், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் ஆய்வு நடத்தினர். பின்னர் குமுளி 1ஆம் மைலில் உள்ள பொதுப்பணித்துறையினர் அலுவலகத்தில் ஆய்வு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News