இன்று பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானை முண்டந்துறைக்கு பயணமானது

தேனி மாவட்டத்தில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் நோக்கி பயணிக்கிறது.

Update: 2023-06-05 09:15 GMT
லாரியில் ஏற்றப்பட்டு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு பயணமாகும் அரிக்கொம்பன் யானை.

தேனி மாவட்டத்தில் இரண்டு மாதமாக கலக்கி வந்த அரிக்கொம்பன் யானை இன்று காலையில் பிடிபட்டது. வனத்துறையினர் அரிக்கொம்பனை லாரியில் ஏற்றி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் நோக்கி கொண்டு செல்கின்றனர்.

கடந்தாண்டு குமுளியில் நடந்த யானைகள் தின விழாவில் கலந்து கொண்ட மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்த களக்காடு முண்டந்துறையின் மேற்குப் பகுதியை அகத்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவித்தார். 1,197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சோலைக் காடுகளும், நீரூற்று மண்டலங்களும் நிறைந்த அகத்தியமலை உலகப்பிரசித்தி பெற்ற வனப்பகுதியாகும். மனித நடமாட்டத்திற்கு வேலை எதுவும் இல்லாத பகுதியான இந்த அகத்திய மலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் 2 ஆயிரத்து 761 யானைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அடிப்படையிலேயே அகத்திய மலை தற்போது தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக மாறி இருக்கிறது.

குமரி மாவட்டம், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரந்து விரிந்து கிடக்கிறது இந்தக் காப்பகம். குமரி மாவட்டத்தின் பேச்சிபாறை அணைக்கு வடக்கே, திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை, குதிரைவெட்டி, காரையாறு, சேர்வலாறு வனப்பகுதிகளுக்கு மேற்கே, திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாலோடு நெடுமங்காடு பொன்முடி பகுதிகளுக்கு கிழக்கே வரை பரந்து விரிந்து கிடக்கிறது. குற்றாலமலை, கொல்லம் மாவட்டத்தில் உள்ள தென்மலை, கல்லடா ஆறுக்கு தெற்கே உள்ள பகுதி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதி தான் அகத்தியமலை என்று அழைக்கப்படுகிறது.

சுருக்கமாக சொல்லப் போனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நம்பி கோயிலில் தொடங்கி குற்றாலம் மலை வரை நீண்டு கிடக்கும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பெரும்பகுதியை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த அகத்தியமலை, ஒரு விசித்திரமான வனப்பகுதி.


தமிழகத்திலிருந்து அகத்திய மலைக்கு செல்வதற்கு எப்போதும் வனத்துறை அனுமதிப்பதில்லை. ஆனால் அகத்தியர் கால் பதித்த இடத்தை தரிசிக்க வருகிறவர்கள் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெடுமங்காடு, பாலோடு வழியாக கேரள வனத்துறையினரின் அனுமதியைப் பெற்று வருகிறார்கள். அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே.

அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள பாபநாசத்தில் இருந்து காரையாருக்கு ஒரு வனச்சாலை இருக்கிறது. அந்தக் காரையாறில் இருந்து, பாபநாசம் அணைக்கு மேலே உள்ள காணிக்குடியிருப்புக்கு, தூர்ந்து போன சாலை ஒன்றும் இருக்கிறது. அங்கிருந்து நெடுமங்காட்டுக்கு 26 கிலோ மீட்டர் மட்டுமே என்று அளவீடு செய்யப்பட்டு, பொதிகை மலையை ஊடறுத்து சாலை போடுவதற்கான ஏற்பாடுகள் 1996 காலகட்டத்தில் நடந்தது.

அப்படி சாலை போட்டால் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகமும் அகத்திய மலையின் சோலைக் காடுகளும், அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான வன உயிர்களும் அழிவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பெரும் போராட்டம் சாலைப் பணியை முடக்கிப் போட்டது.

மத்திய வனத்துறையின் நீண்ட கால தேடுதலில் அடிப்படையில், இப்போது நீரூற்றுகளுக்கு பெயர் பெற்ற அகத்தியமலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வற்றாத ஜீவ நதியாக ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணியின் மூல காரணம் இந்த அகத்திய மலை தான். காரையாருக்கு மேலே உள்ள அகத்திய மலையில் இருந்துதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது.

தாமிரபரணி மட்டுமல்ல கிட்டத்தட்ட 9 நதிகளின் பிறப்பிடமாகவும் அகத்தியமலை இருக்கிறது. இந்த காப்பகத்தில் அரிசி கொம்பனை விட்டால் பெரிய அளவிற்கு மனித உயிர்களுக்கு சேதம் இருக்காது. பாபநாசம் காரையாறு அணைக்கு மேலே அதிகபட்சம் 3 கிலோமீட்டர் வரை அதாவது காணிக்குடியிருப்பு வரை அரிசி கொம்பனை ஏற்றிய லாரியை கொண்டு செல்ல முடியும். காணிக்குடியிருப்பை தாண்டி யானையை விடுவதோடு வெடிவைத்து அதனை மேற்கே விரட்ட வேண்டும். விரட்டினால் தான் அது அகத்தியர் கோயிலை தாண்டி நீரூற்று நிறைந்த சோலை காடுகளுக்குள் புகுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இல்லையேல் அங்கிருந்து நகர்ந்து அது மாஞ்சோலையில் ஒரு பகுதியான குதிரை வெட்டிக்குள் நுழைவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

குதிரை வெட்டிக்குள் நுழைந்தால் அங்கிருந்து அது எளிதாக மாஞ்சோலை தேயிலை தோட்டங்களுக்குள் நுழைந்து விடும். அதுபோல இன்னொரு பாதை இருக்கிறது. அதாவது களக்காடு தலையணைக்கு மேலே விட்டால், அங்கிருந்து செங்கல்தேரியை தாண்டி அது வனப்பகுதிக்குள் சென்று விடுமானால் கீழே இறங்குவதற்கு வாய்ப்பில்லை.

எனவே அரிசி கொம்பன் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அகத்தியர் மலை யானைகள் காப்பகம் இருக்கும் என வன ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் வனத்துறையின் முடிவினை வரவேற்று வருகின்றனர்.

அந்த உயிர் நோய் நொடியின்றி தன்னுடைய ஆயுள் முழுவதும் திடகாத்திரமாக அந்த பெருவனத்தை சுற்றி வருவதற்கு பிரார்த்திப்போம்.

Tags:    

Similar News