சுருளி அருவி வனத்தில் அரிக்கொம்பன் யானை
கம்பத்தை விட்டு வெளியேறிய அரிக்கொம்பன் யானை, சுருளி அருவி வனப்பகுதியில் சுற்றி வருகிறது.;
தேனி மாவட்டம், கம்பத்தில் 16 மணி நேரம் கலக்கிய அரிக்கொம்பன் யானை, நேற்று இரவு பைபாஸ் ரோடு வழியாக சாமாண்டிபுரத்தை கடந்து சுருளிப்பட்டிக்குள் புகுந்தது. இரவு நேரத்தில் சுருளிப்பட்டிக்குள் சென்றால், எந்த வித அசம்பாவிதமும் இல்லை.
தற்போது அரிக்கொம்பன் சுருளி அருவி வனப்பகுதியில் சுற்றி வருகிறது. இந்த வனம் மிகவும் அடர்ந்தது. யானையினை வனத்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை, உள்ளாட்சித்துறைகள் பின்தொடர்ந்தாலும், யானையின் நடமாட்டம் குறித்தும், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ரகசியம் காக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த யானை இருக்கும் இடத்தினை சுற்றிலும், சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளியாறு மின்நிலையம் ஆகிய சிறிய கிராமங்களும், கூடலுார் நகராட்சியும் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கும்கி யானைகளும் வந்து விட்ட நிலையில், தேவைப்பட்டால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் யானையை பிடிப்பதை விட, வனத்திற்குள் அனுப்பும் நடவடிக்கைக்கே முன் உரிமை தரப்படும். வேறு வழியில்லா விட்டால் மட்டும் யானை பிடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது சுருளி அருவி வனப்பகுதியில் இருப்பதால் யானை வனப்பகுதிக்குள் அனுப்புவதில் எந்த பிரச்னையும் இருக்காது என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.