ஜெ., இருந்திருந்தால் அரிக்கொம்பனை என்ன செய்திருப்பார்?
மறைந்த முதல்வர் ஜெ., பதவிக்காலத்தில் இப்படி அரிக்கொம்பன் தொல்லை இருந்திருந்தால், அவர் என்ன செய்திருப்பார் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது.;
அரிசிக்கொம்பன் யானை அறிக்கொம்பன் என்றும் அழைக்கப்படுகிறது. அரிசிக்கொம்பன் காட்டுப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
இது குறித்து பா.ஜ.,வின் மருத்துவ அணிப்பிரிவு டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., கூறியதாவது:
'இதுவரை வனத்துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அரிக்கொம்பன் யானை தினமும் 40 முதல் 60 கி.மீ., துாரம் உலவுகிறது. யானையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் மூலம் அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் துல்லியமாக கண்காணித்து வருகின்றனர். எல்லாம் சரிதான். யானையை ஒவ்வொரு நொடியும் கண்காணிப்பது மட்டும் தான் வனத்துறை வேலையா. மேகமலை வனத்திலும், தேக்கடி வனத்திலும், போடிவனத்திலும், பல லட்சம் வனவிலங்குகள் உள்ளன. பலநுாறு யானைகள் உள்ளன.
இந்த விலங்குகள் எல்லாம் ஊருக்குள் வந்து தொந்தரவு தருகின்றதா? ஏதாவது ஒரு விலங்கு அவ்வப்போது விளைநிலங்களுக்குள் இறங்கும். இது நமக்கு ஏற்ற இடம் இல்லை என தெரிந்த உடன் மீண்டும் வனத்திற்குள் சென்று விடும். ஆனால் அரிக்கொம்பன் யானை வனத்திற்குள் வாழ விரும்பவில்லை. தனது விருப்ப உணவான அரிசி, ஜீனியை தேடி குடியிருப்புகளை நோக்கியே வருகிறது. அரிசி, ஜீனி கிடைக்க விடாமல் மனிதர்கள் தான் தடுக்கின்றனர் என்ற எண்ணம் அதன் மனதில் பதிந்து விட்டது. இதனால் மனிதர்களை கண்டதும் தாக்க முற்படுகிறது. இப்படி ஒரு குணம் படைத்த யானையை எத்தனை நேரம் குடியிருப்புகளுக்குள் வரவிடாமல் பாதுகாத்துக் கொண்டே இருக்க முடியும்? இந்நேரம் பா.ஜ., மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் அரிக்கொம்பனை பிடித்து முதுமலை யானைகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று பல்வேறு பயிற்சிகளும், சிறந்த உணவுகளும் வழங்கி, அதன் குணத்தையும், உணவு முறைகளையும் மாற்றும் முயற்சி மேற்கொண்டிருப்போம்.
இவ்வளவு ஏன் முன்னாள் முதல்வர் ஜெ.,க்கு யானைகள் மீது எவ்வளவு பிரியம் என்பது உலகம் முழுக்க அறிந்த விஷயம். அவர் தற்போது ஆட்சியில் இருந்திருந்தாலும் அரிக்கொம்பனை பிடித்து முதுமலை காப்பகத்திற்கு கொண்டு வந்த சிறப்பாக அதனை மாற்றியிருப்பார். அவரது ஆட்சிக்காலத்தில் இருப்படி ஒரு தொல்லை இருந்திருந்தாலும், இதுவே நடந்திருக்கும். எந்த சூழலிலும் ஜெயலலிதா யானையை துன்புறுத்தியிருக்கவே மாட்டார். தற்போது யானையை இத்தனை பேர் பின்தொடர்வதும், அதன் போக்கை மாற்றுவதும், அதற்காக சில, சில முயற்சிகளை மேற்கொள்வதும் கூட அரிக்கொம்பனுக்கு கொடுக்கும் உளவியல் சித்திரவதை தான்.
தற்போதைய நிலையில் வேறு வழியில்லை என்பதால் வனத்துறை, யானை கண்காணிப்பாளர்கள், கால்நடை மருத்துவர்கள், போலீசார் செய்வதை பாராட்டுகிறோம். ஆனால் எத்தனை நாள் இப்படி துாங்காமல், உணவு உண்ணாமல் யானையுடன் போராடப்போகிறீர்கள். யானை வனத்திற்குள் செல்ல விரும்பவில்லை. அரிசி, ஜீனி தேடி குடியிருப்புக்குள் தான் வருகிறது. இதனை நன்கு தெரிந்த பின்னரும், இந்த போராட்டம் தேவையற்றது. இதனால் பல அரசுத்துறை அதிகாரிகளுக்கு தான் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இந்த போராட்டத்தை தவிர்க்க யானையை பிடித்து முதுமலை யானைகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று அதற்கு பயிற்சி கொடுங்கள். உணவு முறையை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதனை சில மாதங்கள் அங்கு வைத்து பராமரித்து சற்று பக்குவப்படுத்தி, மீண்டும் அடர்ந்த வனத்திற்குள் விடுங்கள். இது மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஆகும்' இவ்வாறு அவர் கூறினார்.
இதே கருத்தை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கமும் தொடர்ந்து கூறி வருகிறார் என்பதையும் உற்று கவனிக்க வேண்டும். தேனி மாவட்ட மக்கள் யானையின் மீது பெரும் அன்பு கொண்டவர்கள். கம்பத்தில் யானை 16 மணி நேரம் உலவிய போது கூட அதனை பேரிடர் காலமாக எடுத்துக் கொள்ளாமல், பெரும் சர்ப்ரைஸ் நிறைந்த ஒரு நாளாக மட்டுமே எடுத்துக் கொண்டனர்.
யானைகளுக்கு முடிந்த வரை உணவு கொடுத்தனர். தேனியை சேர்ந்த ஒரு டாக்டர் யானைக்கு உணவாக 25 வாழை மரங்களை வெட்டி அனுப்பி வைத்தார். இப்படி மக்கள் வரவேற்கும் ஒரு சூழலில் அதிர்ஷ்டவசமாக அரிக்கொம்பன் யானை நல்ல மூடில் இருந்ததால் சேதம் ஏதும் நடக்கவில்லை. அதன் மூடு மாறியிருந்தால் பெரும் அதகளம் ஆகியிருக்கும். எனவே, வனத்துறை அரிக்கொம்பனை வனத்திற்குள் துரத்தினாலும் அதனை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எனவே பிடித்து முதுமலை காப்பகத்திற்குள் கொண்டு செல்லுங்கள் என்ற குரல் தேனி மாவட்டத்தில் வலுத்து வருகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அரிக்கொம்பனால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடாமல் தவிர்ப்பதற்கு, முதுமலை காப்பகத்திற்கு கொண்டுசென்று பயிற்சி அளித்து மீண்டும் வனத்துக்குள் விட நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.