ஆடு, கோழி வளர்க்க விவசாயிகளுக்கு கால்நடைத்துறையினர் வேண்டுகோள்..!
விவசாயிகள் ஆடு, கோழி வளர்த்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கால்நடைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
நாட்டுக்கோழி முட்டை ஒன்று 15 ரூபாய்
தேனி மாவட்டத்தில் கடந்த தீபாவளிக்கு ஆடு, சேவல்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. நாட்டுக்கோழி முட்டை ஒன்று 15 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. தேனி மாவட்ட விவசாயிகள் தற்போதே ஆடு, கோழி வளர்க்க தொடங்கினால் பங்குனி, சித்திரை திருவிழா மற்றும் ஆடி, தீபாவளியின் போது சிறப்பான லாபம் எடுக்க முடியும் என கால்நடைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கடந்த தீபாவளிக்கு ஆடு, கோழிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வரும் தை அமாவாசைக்கு, ஒரு பிரிவு மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். மற்றொரு பிரிவு மக்கள் தங்களது குல தெய்வங்களுக்கு ஆடு, சேவல்களை படைத்து வழிபடுவார்கள். வழக்கமாக ஆடு, சேவல்கள் வாங்கும் முன்னர் பக்தர்கள் பெருமளவில் தவித்துப்போயினர். ஆடு, சேவல்கள் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு கிலோ உயிருடன் 550 ரூபாய் விலை கூறுகின்றனர்.
ஒரு சேவல் குறைந்தது இரண்டு கிலோ முதல் இரண்டரை கிலோ வரை இருக்கிறது. நன்கு வளர்ச்சி அடைந்த சேவல் தான் குலதெய்வங்களுக்கு படைக்க வேண்டும் என்பதால் ஒரு சேவலை ஆயிரம்் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை விலை கொடுத்து பக்தர்கள் வாங்குகின்றனர். இவ்வளவு விலை கொடுத்தும் பலருக்கு சேவல் கிடைக்கவில்லை.
இது குறித்து அறிந்த கால்நடைத்துறை ஆடு, கோழி வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டால் நல்ல வருவாய் பெறலாம் என அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 1100 ரூபாயினை கடந்து விட்டது. ஒரு கிலோ நாட்டுக்கோழி உயிருடன் 600 ரூபாயினை கடந்து விட்டது.
நாட்டுக்கோழி முட்டை ஒன்று 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் ஊர்க்காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள், அம்மன் தெய்வங்களின் வழிபாடுகள் அதிகம் இருக்கும். அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு ஆடு, சேவல் படைத்து வழிபாடு நடத்துவார்கள். அடுத்த ஒரு மாதத்தில் தை மாதம் பிறக்கிறது. அடுத்த இரண்டு மாதத்தில் சித்திரை, வைகாசி கோயில் பண்டிகை தொடங்குகிறது.
ஆக ஆடு, கோழிகளுக்கு நாளுக்கு நாள் மவுசு கூடுகிறது. இதனை உணவுக்கும், வழிபாட்டிற்கும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி செய்பவர்களின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சியில் உள்ளது. இதனால் விவசாயிகள் தற்போது ஆடு, கோழிகளை வளர்த்தால் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டை விற்பனை மூலம் பெரும் வருவாய் ஈட்ட முடியும். தற்போது ஆடு, கோழி வளர்ப்பது நல்ல லாபகரமான தொழிலாக மாறி உள்ளதால், விவசாயிகள் இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.