கற்புக்கரசி கண்ணகி பக்தர்களுக்கு மனம் திறந்த மடல்...!
உலகமெங்கும் பரந்து வாழும் மங்கலதேவி கற்புக்கரசி கண்ணகி பக்தர்களுக்கு ஒரு மனம் திறந்த மடல்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் எழுதி உள்ள கடிதத்தில் கூறியதாவது::
கடந்த சில ஆண்டுகளாக கூடலூருக்கு மேலே அமைந்திருக்கும் மங்கலமடந்தை கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு நாளை ஒட்டி பல்வேறு சிக்கல்கள் எழுவதும், படிப்படியாக அது குறைவதுமாக நடந்து கொண்டே இருக்கிறது.
கோவில் தொடர்பான சிக்கல்களில் தமிழக-கேரள எல்லையும் முதன்மையாக இருக்கிறது. நிலவியல் ரீதியாக தமிழக எல்லைக்குள் அமைந்திருக்கும் கண்ணகி கோயிலை, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே சொந்தம் கொண்டாடி வருகிறது கேரள மாநில அரசு. அதற்கு ஒரு காரணமாய் அமைந்து விட்டது குமுளியில் இருந்து கொக்கரகண்டம் வழியாக கண்ணகி கோயிலுக்கு செல்லும் மலைச்சாலை.
இந்தச் சாலை தான் கோவிலை அவர்கள் உரிமை கோருவதற்கான முதன்மை காரணம் என்றாலும், அதையெல்லாம் தாண்டி இத்தனை புராதனமான பழம்பெரும் சின்னம் ஒன்று கேரளாவில் எங்கினும் காணக் கிடைக்காததும் ஒரு காரணம்.
மொழி தொட்டு, பாரம்பரிய சின்னங்கள் தொட்டு, தமிழகத்தின் பாரம்பரியத்திற்கருகே கூட நெருங்க முடியாத நிலையில் இருக்கிறது கேரளம். அதனால்தான் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் 60 விழுக்காடு ஆதிவாசி மக்கள் இருந்தும், மூணாறு அருகே உள்ள தமிழ் முதுவான்கள் வாழும் இடைமலைக்குடியை,கேரளாவின் முதல் ஆதிவாசி பஞ்சாயத்தாக அறிவித்தது கேரள மாநில அரசு.
1956 மொழிவழி பிரிவினைக்குப் பிறகு, பாறசாலை முதல் நீலகிரி மாவட்டம் தாளூர் வரை உள்ள 822 கிலோமீட்டர் தமிழக கேரளா எல்லையில், இதுவரை அளக்கப்பட்டது வெறும் 122 கிலோமீட்டர் மட்டுமே.
அளக்கப்படாத மிச்சம் உள்ள பகுதிகளில் இந்த கண்ணகி கோயில் எல்லையும் வருகிறது என்பதை நாம் கவனமாக உணரத் தவறிவிட்டோம்.
2018 ஆம் ஆண்டு கம்பம் மெட்டு எல்லையில் தமிழகப் பகுதிக்குள் வந்து, கேரள மாநில அரசு இரவோடு இரவாக ஒரு கண்டெய்னரை நிறுத்தி இருந்தது. kerala Exice என்று பொறிக்கப்பட்ட அந்த கண்டெய்னரை கண்ட தமிழக வனத்துறையினர், முறைப்படி தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து, நானும் பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கும் சக்கரவர்த்தியும் இணைந்து இந்த கண்டெய்னர் விவகாரத்திற்காக கம்பம் நகரில் உள்ள தேவர் சிலை அருகே பிரமாண்டமான ஒரு உண்ணாவிரதத்தை நடத்தியதோடு, இருசக்கர வாகனங்களிலும் கார்களிலும் கம்பம் மெட்டுக்கே சென்று போராட்டமும் நடத்தினோம்.
போராட்டம் தீவிரமடையும் என்று நாங்கள் அறிவித்ததும், இரு மாநில எல்லையை அளவீடு செய்வதற்காக நாள் குறிக்கப்பட்டது. தேவிகுளம் சப் கலெக்டர், உத்தமபாளையம் ஆர் டி ஓ என இரண்டு அதிகாரிகளை முதன்மையாகக் கொண்டு கம்பம் மெட்டு அருகே இருக்கும் நாவல் பள்ளம், மந்திச்சோலையில் இரு மாநில எல்லையை அளக்கத் தொடங்கினார்கள். 14 எல்லை கற்களும் ஊன்றப்பட்டது.தொடர்ச்சியாக கம்பம் மெட்டு அமைந்திருக்கும் கேரள காவல்துறை சோதனை சாவடியை அளந்த போது, அது தமிழக எல்லைக்குள் இருப்பதாக அளவீடு காட்டியது. ஆடிப்போன கேரளா வருவாய்த்துறை அதிகாரிகள், இனி அளக்க முடியாது என்று தலை தெரித்து ஓடினார்கள்.
எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால்,தமிழக கேரள எல்லை இன்னமும் முறைப்படி அளக்கப்படவில்லை என்பதை இங்கிருக்கும் அறக்கட்டளைக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த இடத்தில் நாங்கள் உங்களோடு முரண்படுகிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
நிலவியல் ரீதியாக தமிழக எல்லைக்குள் அமைந்திருக்கும் ஒரு புராதன சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் அல்லது புனர் நிர்மாணம் செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்ட நீங்கள், கேரள மாநிலத்திற்கு சென்று அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தான் எங்களுக்கான பிரதான பிரச்சனை.
கூடுதலாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை நேரில் சென்று சந்தித்து,கூட்டு அறக்கட்டளையை உருவாக்கி அதைக் கொண்டு நாங்கள் கோவிலை சீர்திருத்தம் செய்யப் போகிறோம் என்று பகிரங்கமாக அறிவித்தது எங்களுக்கான இரண்டாவது பிரச்சனை.
திருச்சூர் வட்ட எல்லைக்குள் கண்ணகி கோவில் தள்ளப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சனையை நீங்கள் சரி செய்ய நாடி இருக்க வேண்டியது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை...
நிலவியல் ரீதியாக தமிழக கேரள எல்லை குறித்து பத்திருபது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தளங்களில் விவாதிக்க கூடியவன் நான். ஏதோ சண்டை போட வேண்டும் என்பதற்காக கண்ணகி கோவிலில் நாங்கள் தலையிடவில்லை. கண்ணகி கோவிலில் உள்ள நிலவியல் பிரச்சினை குறித்து பேசுவதற்கான தார்மீக உரிமை எனக்கும், எங்கள் சங்கத்திற்கும் இருப்பதால் பேசுகிறோம்.
கேரளாவில் சென்று வழக்கு தொடுப்பதற்காக நீங்கள் கூறும் காரணங்களை ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து பார்த்தோம். அந்த நடவடிக்கையில் எங்களுக்கு எவ்வித உடன்பாடும் இல்லை. இது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேனி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் நானும் சக்கரவர்த்தியும், அண்ணன் ராஜேந்திரனை நேரடியாக சென்று சந்தித்து இது குறித்து பேசினோம்.
அது ஒரு சம்பிரதாயமான பேச்சுவார்த்தையாகத்தான் இருந்ததே தவிர, அதில் நாங்கள் முரண்பட்டு தான் வெளியேறினோம். ஏதோ இன்று நேற்று கண்ணகி கோயிலுக்காக நான் பேசவில்லை என்பதற்கு இதுதான் சான்று.
என்ன காரணம் சொன்னாலும் அதிகார எல்லையைத் தாண்டி போடப்பட்ட ஒரு வழக்கு இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதை நேர்மையான கண்ணகி பக்தர்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்றைக்கு நிலுவையில் இருக்கிறது. தமிழக அரசால் எதுவும் செய்ய முடியாமல், கடந்த ஆண்டு கண்ணகி கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருகிறோம் என்று தேனி இணை ஆணையர் அலுவலகத்தில் துண்டறிக்கை ஒட்டப்பட்டது.
கண்ணகி கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக பொது வெளியில் பேசி வரக்கூடியவன் நான். அதற்குக் காரணம் இருக்கிறது. தனிப்பட்ட அறக்கட்டளையினர் மீது நான் தனிமனித தாக்குதல் எதையும் எப்போதும் நடத்தியதில்லை. எனக்கு அது அவசியமும் இல்லை. ஆனால் செய்த தவறை சுட்டிக்காட்டினோம். விமர்சனங்களை தாங்கிக் கொள்ள பக்குவமில்லாததால் எங்கள் மீது தவறான புகார் எழுப்பினார்கள்.
கோவில் சமதளத்தில் இல்லை. முழுமையாக நம்முடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.அதற்கு செல்லும் சாலையும் நம்மிடம் இல்லை என்கிற நிலையில் தான், ஒரு அரசு அந்த வேலையை செய்தால், இன்னொரு மாநில அரசு அதற்கு கட்டுப்பட வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன்.
ஒரு அறக்கட்டளை அந்த கோவில் நிகழ்வை ஏற்றெடுத்து நடத்தினால், இன்னொரு அரசு அதன் மீது ஆதிக்கம் செலுத்துமே தவிர, கண்டிப்பாக கட்டுப்படாது. இதுதான் எங்களுக்கான பிரதான முதன்மை பிரச்சனை. அறக்கட்டளை சார்பாக கேரள மாநில முதல்வரை எந்த அடிப்படையில் சென்று சந்தித்து, ஒரு கூட்டு அறக்கட்டளையை உருவாக்குகினீர்கள் என்கிற எங்களுடைய கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
அந்தக் கூட்டு அறக்கட்டளையின் செயலாளர் பொறுப்பை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அமைப்பினுடைய தலைவர் பத்மகுமாருக்கு கொடுக்கப்பட்ட போதே நீங்கள் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல்,அது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் என் மீது தனிமனித தாக்குதல் நடத்துவதை எந்த வகையில் அனுமதிக்க முடியும்.
ஒரு மாநில அரசுக்கென்று தனிப்பட்ட இறையாண்மை இருக்கிறது. அந்த இறையாண்மையின் மாண்பை பாதுகாக்க வேண்டிய கடமை இந்த தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.
தமிழக அரசுக்கே தெரியாமல், அதனுடைய கவனத்திற்கும் முழுமையாக கொண்டு செல்லாமல், நாங்கள் கேரள மாநில முதல்வரை சந்திப்போம் , பிரச்சனைக்குரியதாக கேரளா செல்லும் கோவில் தொடர்பாக கேரளாவிலேயே வழக்கு தொடுப்போம் ,நாங்களே புனர்நிர்மாணம் செய்ய போகிறோம்.
கூட்டு அறக்கட்டளை முடிவு தான் இறுதி முடிவு என்று நீங்கள் அறிவித்ததற்கு பிறகும் நாங்கள் மௌனம் சாதித்தோம் என்றால், எல்லைப் பிரச்சினை பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமையை இழந்து விடுவோம் என்கிற அடிப்படையில் தான் இந்த களத்தில் நாங்கள் நிற்கிறோம்.
நீங்கள் அன்னதானம் போடுங்கள், வசூல் செய்யுங்கள், என்னவோ செய்து கொள்ளுங்கள். அது எங்களுக்கு அவசியம் இல்லாமல் தான் முதலில் இருந்தது.ஆனால் அடிப்படைப் பிரச்சினை பற்றிய எங்களது கேள்விக்கு, புரிதல் இல்லாமல் வந்த உங்கள் பதிலால் தான், அடுத்த கட்டத்திற்கு நாங்கள் நகர்ந்தோம்.
தீவிரவாத வழக்கு எதுவும் என் மீது நிலுவையில் கூட இல்லாத நிலையில், நீங்கள் என்னை தீவிரவாதி என்று ஒருமையில் அழைத்த போது தான், உங்களை நோக்கி அடுத்த கட்ட பாய்ச்சலை நாங்கள் தொடங்கினோம்.
பொதுவெளியில் ஒரு கோவில் தொடர்பாக நீங்கள் செய்யும் வசூல் குறித்து கேள்வி கேட்கும் உரிமை கண்ணகி பக்தர்கள் அனைவருக்கும் இருக்கிறது என்பதை நீங்கள் உணர மறுத்ததால் தான், ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி போராட வேண்டிய தேவையும் அவசியமும் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்து சமய அறநிலை துறை கண்ணகி கோவில் திருவிழாவை நடத்தினால் மட்டுமே கேரளா அரசாங்கத்திற்கு உரிய பதிலை கொடுக்க முடியும் என்கிற நிலையில், சூழலை உணர்ந்து நீங்களே உங்கள் செயல்பாடுகளை மறு பரிசீலனை செய்திருந்தால் இன்றைக்கு நாங்கள் வீதிக்கு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
எல்லாவற்றையும் தாண்டி அந்த பத்தினி தெய்வத்தை ஒரு சாதி வட்டத்திற்குள் அடைக்க நினைக்கும் ஒரு வேலையும் கடந்த சில ஆண்டுகளாகவே வண்ணாத்திப் பாறையில் நடந்து தான் வருகிறது. இதை உங்களால் மறுக்க முடியுமா...?
நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மா காந்தியடிகளையே ஆயிரம் விமர்சனம் செய்து வருகிறோம். அவருக்கு முன் நாமெல்லாம் எம்மாத்திரம். இதுவரை எங்கள் கேள்விகளுக்கு பதிலை தாருங்கள் என்று உங்களிடம் கேட்டோம். இனி அப்படி கேட்கப் போவதில்லை. ஒன்று போராட்ட களம் அல்லது நீதிமன்றம். இதுதான் எங்கள் முடிவு. தேனிமாவட்ட நிர்வாகம், கண்ணகி பக்தர்களுக்கு கொடுத்திருக்கும் உத்திரவாதத்தை இந்த ஆண்டே நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கொள்கையில் சமரசமற்ற நாங்கள், கண்ணகி கோவில் தொடர்பாக அறக்கட்டளையிடம் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ளப் போவதில்லை. நீங்கள் கோவில் திருவிழா தொடர்பாக அடித்திருக்கும் துண்டறிக்கை இடுக்கி மாவட்டத்தில் பல இடங்களில் இன்றைக்கு காணக் கிடைக்கிறது. கோவில் நம்முடைய வசம் வந்து விடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் கேரள மாநில அரசிற்கு இதெல்லாம் ஒரு துருப்புச்சீட்டு என்பதை கவனமாக மறந்து விட்டீர்கள். இன்னும் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. இவ்வாறு கூறினார்.