முக்கியமான தீர்மானம் வரப்போகுது... தேனி நகராட்சி கவுன்சிலர் தகவல்

Theni Municipality- முக்கியமான தீர்மானம் வரப்போகுது என தேனி நகராட்சி கவுன்சிலர் தகவல் தெரிவித்தார்.

Update: 2022-07-22 02:21 GMT

தேனி நகராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா ஐயப்பன்.

Theni Municipality-தேனி நகராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மிக முக்கியமான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா ஐயப்பன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:-

எனது வார்டில் திருட்டு பயத்தை முற்றிலும் ஒழிக்கவும், தேவையில்லாத மனிதர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், இரவு நேர, பகல் நேர பாதுகாப்பிற்காகவும் 80 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. இந்த கேமராவில் பல புதிய சிறப்பு அம்சங்கள் உள்ளன. காட்சிகளை இருட்டில் கூட மிக துல்லியமாக பதிவு செய்வதோடு, பேசும் சப்தத்தையும் துல்லியமாக பதிவு செய்யும். அதாவது ஒரு மனிதர் நடந்து சென்றால், அவர் நடந்து செல்வதையும், அந்த சப்தத்தையும் சேர்த்தே பதிவு செய்யும். அவர் யாரிடமாவது பேசினால் என்ன பேசினார் என்பதையும் பதிவு செய்யும். இதற்கு செலவு 11 லட்சத்திற்கு மேல் ஆகும். அவ்வளவு பணத்தையும் பொதுமக்களிடமும், நன்கொடையாளர்களிடமும் வாங்கித்தான் செய்கிறோம். இதற்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் அமைத்து, மூன்று ஷிப்ட்டும் கண்காணிக்க நபர்களையும் நியமிக்க உள்ளோம். இந்த 80 கேமரா பதிவுகளையும், போலீஸ் நிர்வாகத்தின் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் திட்டமும் எங்களிடம் உள்ளது.

தேனி நகரில் மிக, மிக முக்கியமான பிரச்சினை உள்ளது. தேனி நகர் பகுதி முழுவதும் அத்தனை தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா உள்ளது. குறிப்பாக அன்னஞ்சி விலக்கில் இருந்து போடி விலக்கு வரை சுமார் 8 கி.மீ., துாரம் வரை கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டில் உள்ளது. இதேபோல் மதுரை ரோட்டில் நகர் பகுதியை தாண்டி பல கி.மீ., கண்காணிப்பு கேமரா உள்ளது. இந்த வசதி அவசியம் என்றாலும், இதில் ஒரு புது சிக்கலும் உருவாகி உள்ளது. இந்த பகுதியில் முறையற்ற தெருவோர உலர் கழிப்பிடங்கள், சிறுநீர் கழிப்பிடங்கள் உள்ளன. இந்த கழிப்பிடங்களை பயன்படுத்துபவர்களும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகின்றனர். இது அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கிறது. இதனை உணர்ந்த பொதுமக்கள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். பொதுக்கழிப்பிடங்கள் எண்ணிக்கை மிக, மிக குறைவாக (ஒன்றிரண்டு மட்டுமே) உள்ளது. தேனி நகருக்குள் எந்த நேரமும் குறைந்தபட்சம் 2 லட்சம் பேராவது உலவுகின்றனர். தவிர பல ஆயிரம் வணிக, வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் பணியாளர்கள் கூட தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சிறுநீர் கழிக்க ஆண்களே பரிதவிக்கும் நிலை உள்ள போது, பெண்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண, நகர் பகுதி முழுக்க குறிப்பிட்ட இடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே நவீன கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும் என வரும் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர உள்ளேன். முதலில் அத்தனை இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறுநீர் கழிப்பிடங்களை அமைக்க வேண்டும். பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள், கழிப்பறைகளையும் அமைக்க வேண்டும். இந்த விஷயத்தை பலர் அறிந்திருந்தும் தீர்வு காண முன்வரவில்லை. இந்த பிரச்சினையை எனது வார்டு பிரச்னையாக கருதாமல், நகரின் பிரச்னையாக கருதி செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன். இது குறித்து பிற கவுன்சிலர்களிடமும் பேசி வருகிறேன்.

இவ்வாறு கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News