அன்பால் வீழ்ந்த உயிரினம் தெரு நாய்கள்
இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும்.;
ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள் இலை தலைகள் சாப்பிட்டு விடுகிறது. ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.?
உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது??வீட்டிற்குள் இருந்து யாராவதும் வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..?
சாலையோர கடையிலோ தள்ளு வண்டிக் கடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது கல்லைத் தவிர வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது..?
குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்கு மனிதகுலம் இடம் பெயருகிறது. மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்கி வேளாண்மை செய்து தனக்கான உணவை தானே உற்பத்தி செய்கிறது.
குகையில் வாழ்ந்து பழகியவன் வீடு கட்டி வாழப் பழகுகிறான். சிந்து சமவெளி மனித நாகரீகம் பிறக்கிறது. காடுகளில் இருந்து வந்த மனிதன் இன்று நாகரீக, பொருளாதார, சிந்தனை, அறிவியல், குற்ற வளர்ச்சியில் உச்சத்தை எட்டி விட்டான்.
“தெரு நாய்களுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்” என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் கசிந்திருக்கும்.
ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும் போதும் அவன் மட்டும் வரவில்லை. தனக்கு பயன்படக்கூடிய தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகளான ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தன்னோடு அழைத்தே வந்தான்.
அவற்றுள் முதன்மையான விலங்கினம் “நாய்”.”ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”. நரி, ஓநாய், செந்நாய் குடும்ப வகையை சேர்ந்தது தான் நாயும். அவற்றைப் போல நாயும் ஒரு வேட்டையாடும் காட்டு விலங்கு தான். அவைகளுக்கு இருந்த எல்லா குணமும் நாய்க்கும் இருந்தது.
ஒரு குணம் மட்டும் அதிகமாக இருந்தது. அது தான் நாயை இன்று தெருவில் அலைய விட்டிருக்கிறது. அது தான் அன்பும் நன்றியுணர்வும்.. அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்…
எலித் தொல்லைகள் நமக்கு இருக்கும் வரை பூனை பாக்கியசாலி தான். ஆனால், அன்பைத் தவிர வேறு எதையுமே கொடுக்க முடியாததால் கை விடப்பட்டு தெருவில் அலையும் தகுதியை நாய் பெற்று விட்டது.
வேளாண்மை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் முயல், காட்டுப் பூணை போன்றவற்றை மனிதன் வேட்டையாட பொழுது போக்கிற்காக நாய் தேவைப்பட்டது.வீட்டைக் காவல் காக்கும் இடத்தை சி.சி., டிவி கேமராக்கம் நிரப்பியதால் வீட்டின் மதிப்பிற்கேற்ப சில வீடுகளில் நாய் வீட்டிற்கு உள்ளேயும் சில நாய் வீட்டிற்கு வெளியேயும் போனது. பல நாய்களுக்கு தெருவே வீடாகிப் போனது.
மனிதன் social animal (சமூக விலங்கு) என்றால் நாய் கிட்டத்தட்ட semi social animal ஆகி விட்டது. உங்களோடு அதற்கு பேச மட்டும் தான் தெரியாது. உங்கள் மொழியைப் புரிந்து கொள்ளும்,. நீங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும்,.
உங்கள் நண்பர் யார் பகைவர் யார் எனத் தெரியும்,. உங்கள் வண்டியின் சத்தத்தை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே கணித்து வாலாட்டத் தெரியும். உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து சன்னல் ஓரத்தில் அவ்,….அவ்,…அவ்,…என சிணுங்கத் தெரியும்.
உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பித் தாக்காமல் விளையாட்டு காட்டத் தெரியும். உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள் வரைந்த கோலத்தை மிதித்து திட்டு வாங்கியிருக்கும். ஆனால் அவள் திருமணமாகி சென்று விட்டால் மூலையில் படுத்து கவலைப்படும்.
வெளியூருக்குப் போய் வந்த நம் அப்பாவை பார்ததும் முன்னங் கால்களைத் தூக்கி மாரில் வைத்து தாடையை நக்கும். வாலை ஆட்டிக் கொண்டு மளிகைக் கடைக்கு அம்மாவோடு கூடவே போய்ட்டு வரும்.
உங்களுக்கு யாரின் மூலமாவதும் தீங்கா?.. ஒரு கை பார்த்து விடும். இவை அத்தனையையும் செய்ய அடைக்களமாக ஒரு வீடு எல்லா நாய்களுக்கும் கிடைப்பதில்லை. அப்போ, வீடு இல்லாத நாய்களின் நிலை???
வீடு கிடைத்தவை செல்லப் பிராணியாகி விடுகிறது. வீடு கிடைக்காதவை சமூகத்தால் தொல்லை என பார்க்கப்படுகிறது. பார்க்கும் இடமெல்லாம் கல்லடி படுகிறது. தெருநாய்கள் அடி வாங்குவதற்காகவும் வண்டியில் அடிபட்டு சாகவும் படைக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது. பெரிய நாய் தெருவில் அடிபட்டுச் சாக, நாய்க்குட்டிகள் அதைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கும்.
தெருவில் அலைந்து அலைந்து வியர்வையை விட இரத்தமே அதன் உடம்பின் மீது வழிகிறது. உணவுக்கு வழியின்றி பசியில் ஏங்கி ஏங்கி எச்சிலே அதற்கு இரத்தமாக உடம்பில் ஓடுகிறது. இது அத்தனையும் நடந்து கொண்டிருக்கும் அதே தெருவில் காட்டிலிருந்து அது நம்பி வந்த மனிதகுலம் எந்த சம்பந்தமும் இல்லாமல் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும்.
அவர்களுக்கு ஏறெடுத்து பார்க்கக் கூட நேரமில்லை என்பதை விட ஏறெடுத்து பார்த்தாலும் அலட்சியமே மறுமொழியாக இருக்கும் என்பதை உணரும் தெரு நாயின் நிலை என்னவாக இருக்கும்?.ஒரு விலங்கை வேறோடு இடம் பெயர்த்து அடியோடு அதன் குணத்தை உணவு முறையை மாற்றி வைத்தது யார் தவறு?..
அதற்கும் மாட்டுப் பாலுக்கும் என்ன சம்மந்தம்?. அதை அவைளுக்கு உணவாகக் கொடுத்தது யார்??.. தற்போது அவைகளுக்கு அதைத் தர மறுப்பது யார்??ஆனா பாருங்க நன்றி கெட்ட நாய் என்ற சொல்லாடலை “நாம்” வைத்திருக்கிறோம். என்ன ஒரு முரண்?அவைகளுக்கு ஆதரவா இருக்க வேண்டியது யார் கடமை?..
சுற்றுலாவிற்கு செல்லும் போது அங்குள்ள விலங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என சொல்வது இதற்காகத் தான். தெருநாய்களால் இன்று காட்டிற்குச் சென்று வாழவும் முடியாது. நாட்டிற்குள் வாழ ஆதரவும் கிடையாது. தனக்கான உணவை அடைந்து கொள்ளவும் தெரியாது.
அதனால் தான் நீங்கள் சாப்பிடும் போதும் தெருவில் நின்று உங்கள் தட்டையே வெறித்துப் பார்த்து நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டிருக்கிறது.அதன் நாக்கில் இருந்து சொட்டச் சொட்ட வழிவது எச்சில் அல்ல. கைவிடப்பட்ட ஓர் விலங்கின் கண்ணீர். உங்கள் உணவை பரிமாறி அதைத் துடையுங்கள். அனைத்து உயிரினங்களுக்கும் சேர்ந்தது தான் இந்த பூமி...!!!