மதுப்பிரியர்களின் தொல்லை தாங்க முடியலயே... தவிக்கும் அரசு பள்ளி ஆசிரியைகள்
தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி வளாகங்களை குடிமகன்கள் தினந்தோறும் நாசம் செய்து வருவதாக ஆசிரியைகள் புலம்பி வருகின்றனர்
தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் குடிமகன்கள் தொல்லையால் தாங்க முடியாத அளவுக்கு பெருகி விட்டதாக ஆசிரியைகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கட்டடங்கள் நல்ல நிலையில் உள்ளன. குடிநீர், கழிவுநீர், கழிப்பிட வசதிகளும் உள்ளன. சுற்றுச்சுவர் கட்டப்பட்டு மெயின் கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குடிமகன்கள் சுற்றுச்சுவரையும், கேட்டையும் தாண்டி பள்ளிக்குள் சென்று விடுகின்றனர். அங்கு அமர்ந்து மது அருந்துவது, சாப்பாடு சாப்பிடுவது, ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, போதை ஏறியதும் சாப்பிட்ட கழிவுகளை ஆங்காங்கே வீசி எறிவது, வாந்தி எடுப்பது, தண்ணீர் தொட்டிகளை உடைப்பது, குடிநீர் குழாய்களை உடைப்பது, வகுப்பறை வளாகங்களில் இயற்கை உபாதையை கழிப்பது, மதுபாட்டில்களை உடைத்து பள்ளி வளாகங்களில் வீசி எறிவது போன்ற அட்டகாசங்களை வெளியில் சொல்லவே மிகுந்த சங்கடமாக உள்ளது.
தினமும் இதனை காலையில் சுத்தம் செய்யும் முன்னர் எங்களுக்கு போதும், போதும் என்றாகி விடுகிறது. இதனால் பள்ளிக்கு செல்வது என்றாலே எங்களுக்கு கடும் அலர்ஜியாகி விடுகிறது. எத்தனை நாள் தான் இந்த குடிகாரர்களுடன் போராடுவதோ தெரியவில்லை. இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கூறி விட்டோம். நாங்கள் மேற்கொண்ட எந்த முயற்சிகளும் பலன் தரவில்லை. பள்ளிகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நி்ர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றி நாங்கள் நாங்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை நேரில் புகார் செய்தபோது, அவர்களும் கலெக்டர், எஸ்.பி, கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்துள்ளனர் என்றனர்.