ரூல்கர்வ் முறையால் பாதிப்பு: நோட்டீஸ் அச்சிட்டு வழங்க நடவடிக்கை
ரூல்கர்வ் முறையால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி நோட்டீஸ் அச்சிட்டு மாநிலம் முழுவதும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறை அமல்படுத்தப்பட்டது தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட மக்களை தவிர வேறு எந்த மாவட்டத்திற்கும் தெரியவில்லை. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு கூட தெரியவில்லை.
இதனால் ரூல்கர்வ் முறை என்றால் என்ன? கடந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணையில் அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? இந்த ஆண்டும் ரூல்கர்வ் தொடர்வதால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் என்ன? என்பது பற்றிய விவரங்களை 15 பக்கங்கள் கொண்ட நோட்டீஸ்களை அச்சிட்டு மாநிலம் முழுவதும் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு வழங்க பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு தமிழகத்தில் முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்பு போராட்டம் நடந்த போது, தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் ஆதரவு கொடுத்தன. உலகின் பல பகுதிகளிலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழர்கள் குரல் எழுப்பினர். போராட்டங்களும் நடந்தன. இலங்கை கிளிநொச்சியிலும், கேரளாவின் பல பகுதிகளிலும் முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் தமிழகத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்தன. இதனால் அப்போது கேரளா இந்த பிரச்னையில் பின்வாங்கியது.
இதேபோல் இனிவரும் போராட்டங்களிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள விவசாயிகளையும் ஒருங்கிணைத்து போராட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.