தேனி நகராட்சி 32 வது வார்டு திமுக வேட்பாளராக வழக்கறிஞர் செல்வம் போட்டி
முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சியை மக்கள் விரும்புகின்றனர் என திமுக வேட்பாளர் செல்வம் தெரிவித்தார்
தேனி நகராட்சி 32வது வார்டு திமுக வேட்பாளராக வழக்கறிஞர் செல்வம் போட்டியிடுகிறார்.
தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 32வது வார்டில் பூர்வீகமாக வசித்து வருபவர் செல்வம்(40.) பள்ளி பருவத்தில் விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளவராக இருந்தார். இதனால் அதிகளவு நண்பர்கள் சேர்ந்தனர். பொதுப்பணிகளில் சிறு வயது முதலே ஈடுபட்டு தனது உதவும் குணத்தை சிறப்பாக மேம்படுத்திக் கொண்டார். விளையாட்டுத்துறை இவருக்கு ஒருங்கிணைந்த குழு மனப்பான்மையையும், தனது அணிக்காக போராடும் ஆற்றலையும், தனக்கு வேண்டியவர் நலனுக்காக விட்டுக்கொடுக்கும் குணத்தையும் வளர்த்து விட்டது.
கல்லுாரியில் இவருக்கு விளையாட்டுத்துறை கோட்டாவில் சீட் கிடைத்தது. கல்லுாரியிலும் ஏராளமான நண்பர்கள் இவருக்கு உண்டு. சிறு வயது முதலே அரசியல் ஆர்வம் மிக்கவர். தனது கல்லுாரி நண்பர்கள் பலர் ஏழைகளாக இருந்து சிரமப்பட்ட காலத்தில் தனது பெற்றோர் தனக்கு வழங்கிய பணத்தை அவர்களது படிப்புக்கு கொடுத்து உதவி செய்துள்ளார்.
வழக்கறிஞர் படிப்பு முடித்ததும் மதுரையில் ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இதன் பின்னர் தேனிக்கு வந்து பெற்றோருடனே வசிக்க தொடங்கிய இவர், திராவிட இயக்கத்தில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றி வருகிறார். தேனிக்கு வந்தது முதல் இலவச சட்ட உதவி மையம் நடத்தி வருகிறார். ஹாக்கி அகாடமி தொடங்கி, இளைஞர்களுக்கு இலவச ஹாக்கி பயிற்சி வழங்கி வருகிறார். தற்போது இவரை திமுக தனது 32வது வார்டு வேட்பாளராக அறிவித்துள்ளது.
வேட்பாளர் செல்வம் கூறியதாவது: எனது வார்டில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பல ஆண்டுகளாக கவனிப்பாரின்றி கிடந்தது. அதனை நான் புதுப்பித்து தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் திருவிழா நடத்தி உள்ளேன். என்னை முத்துமாரியின் பக்தன் என்றே இந்த வார்டு பெண்கள் செல்லமாக அழைப்பார்கள். தற்போது எனது வெற்றிக்கு முத்துமாரியம்மன் முழு உதவி செய்வார்.
இதற்கு முன்னர் இந்த வார்டில் கவுன்சிலராக இருந்தவர்கள் தங்களது பணிகளை சரிவர செய்யவில்லை. வார்டில் தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், ரோடு சீரமைப்பு உட்பட பல்வேறு பணிகள் செய்ய வேண்டி உள்ளது. அதிகளவில் கழிப்பிட வசதி செய்ய வேண்டி உள்ளது. குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டி உள்ளது. முன்பு நகருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த எங்களது வார்டு தற்போது நகரின் மையப்பகுதிக்கு வந்து விட்டது. பூங்கா, நடைபயிற்சி பாதை வசதி என பல்வேறு அடிப்படை பணிகளை செய்ய வேண்டி உ ள்ளது. முதியோர் உதவித்தொகை, பெண்கள் உதவித்தொகை, ரேஷன் கார்டு, அரசின் நலத்திட்டங்கள் பெற்றுத்தருதல், கல்விக்கு உதவி செய்தல் ஆகிய பணிகளுக்கு தற்போதே தனி அலுவலகம் அமைத்துள்ளேன்.
இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் தயார் படுத்தவும் தனி பயிற்சி மையம் அமைக்க உள்ளேன். இளைஞர்களின் ஆதரவு எனக்கு நுாறு சதவீதம் உள்ளது. பெண்கள் மத்தியில் எனக்கும், எங்கள் குடும்பத்திற்கும் தனி மரியாதை உள்ளது. தற்போது முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் கொண்டு வந்துள்ள திட்டங்கள் மக்களை கவர்ந்து வருகிறது. எங்களது குடும்ப செல்வாக்கு, எனது தனிப்பட்ட செல்வாக்கு, எனது நன்னடத்தை, எனது நேர்மறையான சிந்தனை, ஊக்கமூட்டும் செயல்கள், தளபதி முதல்வரின் நற்பெயர், திமுகவின் இமேஜ் எல்லாமே எனக்கு எளிதான வெற்றியை தரும் என நம்பிக்கை தெரிவித்தார்
தெரிவித்தார்.