தேனி மாவட்டத்தில் வேகமெடுக்கும் ஒமிக்ரான் பரவல்: இன்று 266 பேருக்கு பாதிப்பு
தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் பரவல் வேகமெடுக்க தொடங்கி உள்ளது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.;
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 266 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு பெண்மணிக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் யாருக்கும் ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படவில்லை. காரணம் ஒமிக்ரான் ரிசல்ட் வரும் முன்னர் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விடுகின்றனர்.தவிர இது ஏற்படுத்தும் பாதிப்பும் குறைவு.
எனவே ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டு, கொரோனா தொற்று பரிசோதனை மட்டும் நடந்து வருகிறது. இதில் கண்டறியப்படும் பாதிப்புகளில் 98 சதவீதம் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றாகவே உள்ளது. இவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. மிகவும் ரிஸ்க்கான கேஸ் மட்டும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறது.
இன்று காலை கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் 266 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 1500 பேருக்கும் அதிகமாக தொற்று கண்டறியப்பட்டாலும், இதுவரை 15 பேர் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம். ஆனால் கவனமுடன் இருக்க வேண்டும். காரணம் தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் பரவல் வேகம் எடுத்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.